பெரம்பூர்: பெரம்பூர் ரயில்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில் பயணிகளில் ஒருவர், 4வது நடைமேடை படிக்கட்டில் நீலநிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடப்பதாகவும், அதிலிருந்த துர்நாற்றம் வீசுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். உடனே, பெரம்பூர் ரயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூட்கேசில் சந்தேகம்படும்படி பொருட்கள் உள்ளதா? என சூட்கேசை திறந்து பார்த்தபோது, அதில் தலை, கை, கால்கள் இல்லாமல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், நிர்வாணமாக இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமை யிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தலை இல்லாத உடலை சூட்கேசில் அடைத்து கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விட்டு சென்றது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி சம்பவ இடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சூட்கேசை கொண்டு வந்த நபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக, பெரம்பூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் இந்த வழக்கு ஓட்டேரி காவல்நிலையத்திற்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. பட்டப்பகலில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி இல்லை
பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான இடங்களில் சிசிடிவி பொருத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குறிப்பாக, ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்தில் நான்காவது பிளாட் பாரத்தில் எந்தவித சிசிடிவி கேமராக்களும் இல்லை. இதனால் சூட்கேஸை யார் கொண்டு வந்தது என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சூட்கேஸ் கொண்டுவந்த நபரை அடையாளம்காண முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ரயில்களில் வந்து இறங்கி சூட்கேஸை வைத்திருந்தால் ஒவ்வொரு ரயிலில் முன்பும் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். ரயிலில் நடுபகுதியில் இறங்கி சூட்கேஸை வைத்துவிட்டு சென்றிருந்தால் அதனை கண்டுபிடிப்ப தில் இழுபறி ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தொடரும் கொலைகள்
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பெரம்பூரில் ஆண் சடலம் சூட்கேஸில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிறுமி பலாத்கார சம்பவம், திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் பெண்கள் பாலியல் சீண்டலில் சிக்கிய சம்பவம் மற்றும் தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில் இரட்டை கொலை, மீஞ்சூர் பகுதியில் அடுத்தடுத்த நாட்களில் 2 கொலைகள் என தொடர்ந்து நடந்த சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் அழுத்தியுள்ளன.
