அம்பத்தூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதகளில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு பிரச்னை காரணமாக ஏராளமான மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக பொதுமக்கள் பெரிதும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், அம்பத்தூரில் எஸ்.வி.நகர், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், பானுநகர், புதூர் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளிக்க முயன்றாலும், பணியில் இருக்கும் மின்வாரிய ஊழியர்கள் முறையான பதில் அளிப்பதில்லை.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டால், அவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன. அம்பத்தூர் பகுதிகளில் தொடர் மின்தடை மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் ஆத்திரமான 100க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று நள்ளிரவு கள்ளிக்குப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மின்வாரிய அலுவலக பணியில் இருந்த அதிகாரிகளிடம், நாங்கள் முறையாக மின் கட்டணம் செலுத்துகிறோம். எனினும், எங்கள் பகுதிகளில் நாள்தோறும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் இரவு நேரங்களில் எப்படி தூங்க முடியும்? உங்கள் வேலைகளை சரிவர செய்யுங்கள் என்று பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, கள்ளிக்குப்பம் மின்வாரிய அலுவலக நுழைவுவாயிலில், அம்பத்தூர் பகுதிகளில் மீண்டும் சீரான மின் வினியோகம் நடைபெறும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி, சீரான மின் வினியோகத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து, அம்பத்தூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சீரான மின் வினியோகம் வழங்கியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
