சென்னை: ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இன்றி தமிழக பகுதிக்கு கிராவல் மண் கடத்தி வந்த 9 லாரிகளை சுரங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தின் சில பகுதியில் கடந்த சில மாதங்களாக கிராவல் மண் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் தமிழகத்தில் நடைபெறும் 6 வழிச்சாலை பணிக்காக கிராவல் மண் எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், முறையான அனுமதி ரசீது இல்லாமலும், அதிக பாரத்துடன் லாரிகளில் கிராவல் மண் எடுத்து செல்வதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் சுரங்கத்துறை அதிகாரி பெர்னாட் தலைமையில் வந்த அதிகாரிகள் பெரியபாளையம் வழியாக கிராவல் மண் எடுத்து சென்ற லாரிகளை சோதனை செய்தனர்.
அதில் அதிக பாரமும், முறையான ரசீதும் இல்லாத 9 லாரிகளை பிடித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில், பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.
