×

மாவட்ட செயலாளர் மாற்றப்பட்ட விவகாரம்: புதுகை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி அணியிடம் விஜயபாஸ்கர் ஒப்படைத்தார்

 

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவி, நேற்றிரவு எடப்பாடி பழனிசாமி அணியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள், தவெக அரசை ஆதரித்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை எம்எல்ஏ சி.விஜயபாஸ்கரும் ஒருவர். இதையடுத்து வேலுமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவிகளை பறித்து, புதிய நிர்வாகிகளை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் சி.விஜயபாஸ்கர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக பழனிவேல் என்பவரை புதிய மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன், புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல், தனது ஆதரவாளர்களுடன் புதுக்கோட்டை அசோக் நகரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்திற்கு சென்றார். அப்போது விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இருதரப்பும் பேசி முடிவு செய்து கொண்டு வருமாறு தெரிவித்த போலீசார், கடந்த 15 நாட்களுக்கு முன் அலுவலகத்தை பூட்டி சாவியை ஆர்டிஓ வசம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலாளர் பழனிவேல், கட்சி அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் மற்றும் எஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தார்.இந்நிலையில் புதுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ பிரகாஷ் தலைமையில் நேற்று சமரச கூட்டம் நடந்தது. பழனிவேல் தரப்பினர் பங்கேற்ற நிலையில் சி.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் பங்கேற்காமல் ஒரு வழக்கறிஞர் மட்டுமே அவர்கள் தரப்பில் பங்கேற்றார். தொடர்ந்து ஆர்டிஓ, நாளை (இன்று) மீண்டும் சமரசம் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றிரவு திடீரென விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாவட்ட அலுவலக சாவியை புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு அதிமுகவின் புதிய வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆதரவாளர்களுடன் வந்தார்.

Tags : District Secretary ,Vijayabaskar ,Pudukai District Archdiocese ,Pudukkottai ,Pudukkottai District Adimuka Office ,Edappadi Palanisami ,Tamil Nadu Assembly elections ,Aditmuga ,C. V. Sanmugham ,S. B. 25 ,Velumani ,Dweka ,
× RELATED நடிகர் ரஜினி திடீர் ஊட்டி விசிட்