சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

 

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 18ம் தேதி தொடங்கியது. விழாவின் 16ம் நாளான இன்று காலை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, அம்மன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க பவனி வந்து தேரில் எழுந்தருளினார்.

இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள், ஊர்க்காவல்காரர்கள் முன்நிலையில் தேரோட்டம் தொடங்கியது. அப்போது அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேருக்கு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் பலர் பழங்களை சூறையிட்டும், கரும்புள்ளி, செம்புள்ளி வேஷமிட்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர். தன்னார்வ அமைப்பினர் பக்தர்களுக்கு நீர்மோர், கூழ், குளிர்பானம் வழங்கினர்.

விழாவில் எம்எல்ஏ கருப்பையா, எஸ்.பி. அரவிந்த், டி.எஸ்.பி. ஆனந்த்ராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரன், கோயில் செயல் அலுவலர் ராஜா, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் தலைவர் முருகேசன், பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: