அரசு பஸ் பழுதால் அடர்ந்த வனப்பகுதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்: 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்துசென்ற அவலம்

 

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே அரசு பஸ் திடீரென பழுதடைந்ததால், அடர்ந்த வனப்பகுதியில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் 3 கி.மீ. தூரம் பீதியுடன் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதி வழியாக அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் செக்போஸ்ட் வரை இயக்கப்படும் அரசு பஸ், 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களை கடந்து செல்வதால் வனப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை கேர்மாளம் செக்போஸ்டில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிய அரசு பஸ், கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கோட்டமாளம் வனப்பகுதியில் செல்லும்போது திடீரென அரசு பஸ் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றதால் பஸ்சில் இருந்த பயணிகள் செல்ல முடியாமல் தவித்தனர். சிறிது நேரத்தில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் பஸ் இயக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு பஸ் கோட்டமாளம் பிரிவு அருகே நேரமாகிவிட்டதால் ஊருக்குள் செல்லாது என ஓட்டுநரும், நடத்துநரும் கோட்டமாளம் கிராமத்திற்கு செல்லும் 15க்கும் மேற்பட்ட பயணிகளை கோட்டமாளம் பிரிவு அருகே இறக்கி விட்டனர்.

இதைத்தொடர்ந்து புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணிகள் அச்சத்துடன் 3 கி.மீ. தூரம் நடந்து கோட்டமாளம் கிராமத்திற்கு சென்றடைந்தனர். கோட்டமாளம் கிராமம் வரை இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில் பஸ் நேற்று பழுதாகி சிறிது நேரம் நின்றதால் வனப்பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டு சென்ற சம்பவம் மலை கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிய வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் பயணிகளை இறக்கி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: