×

சிங்கப்பெண் போலீசுக்கு டார்ச்சர்: இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

ஆறுமுகநேரி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் திலீபன். கடந்த மாதம் இவர், சேரன்மகாதேவி காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆனால் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் தொடர்ந்து அங்கேயே பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் காவல் படையில் ஆறுமுகநேரி பெண் காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு உரிய பணி வழங்காமல் டார்ச்சர் செய்ததாகவும், மனரீதியாக தொல்லை அளித்ததாகவும் இன்ஸ்பெக்டர் திலீபன் மீது அவர் புகார் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், இன்ஸ்பெக்டர் திலீபன் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘‘என் மீது கூறப்படும் பாலியல் புகாரில் உண்மையில்லை. என்னுடைய காவல் நிலையத்தில் உள்ள 66 போலீசாரில், 6, 7 பெண்கள் உள்ளனர். என்னுடைய மொபைலை அதிகாரிகளுக்கு தர தயாராக உள்ளேன். அதன் உண்மைத்தன்மையை உணர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளட்டும்.
யாராவது ஒருவர் இதை நான் செய்திருப்பேன் என சொன்னால், நான் வேலையை விட்டே செல்ல தயார். கவுரவத்திற்காக இப்பணியை நான் செய்கிறேன். மொட்டை சார் என கூறும் என் ஊர் மக்களும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எல்லோருக்கும் ஒரே மாதிரி டூட்டி போட முடியாது. டூட்டி முன்ன பின்ன போட வேண்டியது வரும். இந்த புகாரில் இருந்து விடுபடாமல் நான் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் சேர மாட்டேன்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் திலீபனை நெல்லை சரக டிஐஜி தேஷ்முக் சேகர், நிர்வாக காரணங்களுக்காக திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் காவலர் மீதும் புகார்;
இன்ஸ்பெக்டர் மீது புகார் தெரிவித்துள்ள பெண் காவலர், முன்பு திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு ஆண் காவலருடன் நட்பு காரணமாக அவரது கணவர் காவல் நிலையத்திற்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கிருந்த இன்ஸ்பெக்டர், உயரதிகாரிக்கு தகவல் தெரிவித்து பிரச்னையை காவல் நிலையத்திலேயே பேசி முடித்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆதரவு போஸ்டர்;
பெண் காவலர் புகார் தெரிவித்த இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதிமுக மற்றும் ஆறுமுகநேரி ஊர் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் நேர்மையாக பணியாற்றி வந்த பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுத்த இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு நீதி வேண்டியும், பொய் புகார் எழுப்பிய நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஆறுமுகநேரி நகர அதிமுக, லட்சுமிபுரம் காமராஜர் நற்பணி மன்றம், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இன்ஸ்பெக்டர் திலீபனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags : Singhaben ,Arumuganeri ,Thileepan ,Arumuganeri police station ,Thoothukudi district ,Cheranmahadevi police station ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...