×

மேகதாது அணை கட்டுவதை சட்டப்பூர்வமாக அரசு தடுக்கும் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளும் விரைவாக முடிக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் தகவல்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அரசு வக்கீல்கள் தகுதி அடிப்படையில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த விதத்திலும் சாமானிய மக்கள், ஏழை மக்கள் வழக்கில் தீர்ப்பு தாமதமாக கூடாது. கடந்த சில நாட்களாக தற்காலிகமாக வக்கீல்களை தகுதி அடிப்படையில் நியமித்து வருகிறோம். இனி எங்கும் லஞ்சம் இருக்காது. 100 சதவீதம் அவர்கள் தகுதி அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கு முன்பு அவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்று கேட்டபோது வருத்தமாக இருந்தது. பல அழுத்தங்கள் வந்தாலும் நேர்மையாக நாங்கள் செயல்படுவோம். ஒரு மாத காலத்திற்குள் அனைத்து நியமனங்களும் செய்யப்படும். தேங்கி கிடக்கும் அனைத்து வழக்குகளும் விரைவாக முடிக்கப்படும்.

மேகதாது விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேகதாது அணை கட்டுவதற்கு எந்த முயற்சிகளை எடுத்தாலும் அரசு சட்டபூர்வமாக அதை தடுக்கும். எம்எல்ஏக்கள் கட்சி மாறும் விவகாரத்தில் குதிரை பேரம் நடப்பதாக ஆளுநர் அர்லேகரிடம் அதிமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். அதிமுக ஏன் பிளவுபட்டது? என அவர்களே காரணம் கூறுகின்றனர். எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது அவர்களது தனிப்பட்ட முடிவு. அந்த கட்சியின் தலைவரை நம்பி பயணிக்க முடியாது என்று அவர்கள் கட்சியில் இருந்து வெளியே வந்து, பதவியை ராஜினாமா செய்கிறார்கள். இதில் என்ன தவறு உள்ளது. எங்கும் எந்த பேரமும் பேசவில்லை என்பதுதான் 100 சதவீதம் உண்மை. எந்த இடத்திலும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு அதிமுக சென்றால் அதை சட்டபூர்வமாக எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mekedadu Dam ,Minister ,Nirmal Kumar ,Chennai ,Minister for Electricity and Law ,Supreme Court ,High Court ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...