×

‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என வீடியோ பதிவிட்டு உடலில் பெட்ரோல் ஊற்றி நிர்வாகி தீக்குளித்து தற்கொலை: தஞ்சாவூர் அருகே பரபரப்பு

திருவிடைமருதூர்: ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என தனது கடைசி நிமிட வீடியோவை பதிவிட்டு தஞ்சாவூர் அதிமுக நிர்வாகி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளை சேர்ந்தவர் மகேந்திரன் (37). தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி இணைச்செயலாளர். இவரது மனைவி முனீஸ்வரி (32). இவர்களது மகள் நித்யஸ்ரீ (2). திருப்பனந்தாள் கடை தெருவில் பூக்கடை நடத்தி வந்த மகேந்திரன், சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது முதல் மனவேதனையில் இருந்து வந்தார். கட்சி நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து இருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் மகேந்திரன் ‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என தனது கடைசி நிமிட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விட்டு நேற்றுமுன்தினம் இரவு வீட்டருகே உள்ள பாலத்தில் நின்று உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், அதிமுக கட்சி ஒன்றுபட வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும். எனது இறப்புக்கு பிறகாவது கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இருந்து அதிமுகவை மீண்டும் வலிமை பெறசெய்ய வேண்டும். கட்சி பணியில் எனக்கு வழிகாட்டிய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி. எனது இறப்புக்கு பிறகு, எனது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து அதிமுகவினர் அரசு மருத்துவமனை மற்றும் அவரது வீட்டில் திரண்டனர். தகவலறிந்த திருப்பனந்தாள் போலீசார் சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மகேந்திரன் உடலுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் பவுன்ராஜ், முன்னாள் எம்.பி பாரதி மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடாதீர்: எடப்பாடி பேட்டி
எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக சிறப்பான முறையிலே பணியாற்றியவர் மகேந்திரன். இவர் தனது உயிரை மாய்த்து கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி, மனவேதனையை அளித்துள்ளது. இவரது மறைவு அதிமுகவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவர் ஐடி விங்கிலும் தன்னை இணைத்து கொண்டு பணியாற்றி வந்தார். மகேந்திரனின் ஒரு வயது குழந்தையின் கல்வி கட்டணத்தை அதிமுக வழங்கும். மகேந்திரன் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் ரூ.30 லட்சம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்படும். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களும் விலைமதிக்க முடியாதவர்கள். இனி இப்படிப்பட்ட செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றார்.

Tags : AIADMK ,Thanjavur ,Thiruvidaimarudur ,Mahendran ,Thiruppananthal ,Thanjavur… ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...