சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு வருகிற 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையரகத்தில் அரசு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 2026-27ம் கல்வியாண்டில் மாணாக்கர்களின் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தின்போது, 2026-27ம் கல்வியாண்டில், தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 இளநிலை பட்டப்படிப்பு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 சேர்க்கை இடங்கள் உள்ளதாகவும், இதுவரை 2,24,034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 5 மற்றும் 6ம் தேதிகளிலும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 8ம் தேதியும் நடைபெற உள்ளது.
தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும், கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்றுடன் (ஜூன் 2) நிறைவடையவுள்ள நிலையில் அது ஜூன் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் உள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடப்பாண்டுக்கான முதலாம் ஆண்டு, நேரடி 2ம் ஆண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, உயர்க்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வருகிற 29ம் தேதி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர் நியமனம் மற்றும் அரசு கல்லூரியில் காலியாக முதல்வர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து வெகு விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும். அதேபோல், கல்லூரிகளில் சின்ன சின்ன பிரச்னைகள் மற்றும் வழக்குகள் சரி செய்யப்பட்டு முதல்வர் பணியும் நிரப்பப்படும். உயர்கல்வி துறையின் எந்த முடிவுகளாக இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமாக, தமிழக மக்களின் உணர்வு சார்ந்த பிரச்னைகளுக்கு சாதகமாக, தமிழக அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்.
இந்த அரசு மாநில உரிமைகளை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்காது. தமிழகம் என்றைக்கும் தலைநிமிர்ந்து தான் இருக்கும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்க்கு இனி கையூட்டு பெறக்கூடாது, நன்கொடை பெறக்கூடாது, உயர் கல்வித் துறை இனி வெளிப்படை தன்மையாக செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உயர்க்கல்வித்துறை செயலர் அருண்ராய், கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்பக்கல்வி ஆணையர் விசாகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
