சென்னை: தீண்டாமையை கடைபிடிக்க மறுக்கும் தனிநபர்களை பாதுகாக்க மிக தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பு சார்பில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளனர். கடிதம் வருமாறு; இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், இந்திய மக்கள் அரசியலமைப்புச் சட்டம் குறித்து அறியாதவர்களாக இருப்பது ஒரு பெரும் துயரமாகும்.
அரசியலமைப்பு விழுமியங்கள் குறித்து அறியாத மக்கள், சமூக விழுமியங்களையே மிக உயர்ந்தவையாகக் கருதுகின்றனர். சமூகம் விதித்த விழுமியங்களை மீறும் ஒரு ஆணும் பெண்ணும், உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் அல்லது கொல்லப்படுகின்றனர். இத்தகைய வன்முறைச் செயல்கள் அரசியலமைப்பு விழுமியங்களைப் பலவீனப்படுத்துவதால், அவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 13ன் படி, சாதி சார்ந்த விதிமுறைகள் அனைத்தும் செல்லாதவையாகவே கருதப்படுகின்றன.
சாதிய அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது; மேலும், கலாச்சார ரீதியாக வளர்ந்த, முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு சமூகத்திற்கு இது முற்றிலும் ஏற்புடையதல்ல. பள்ளி மற்றும் உயர்கல்வி ஆகிய இரு நிலைகளிலும் உள்ள பாடத்திட்டங்களின் வாயிலாக, வகுப்பறைச் செயல்பாடுகள் சிலவற்றை அறிமுகப்படுத்த வேண்டும். இச்செயல்பாடுகள், மதம் மற்றும் சாதி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டையும்; சமூக விழுமியங்களுக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையும் மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, சாதியத்திற்கு எவ்வித அறிவியல் பூர்வமான அடிப்படை இல்லை என்பதையும், அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளவும் துணைபுரிய வேண்டும்.
தீண்டாமையைக் கடைப்பிடிக்க மறுக்கும் தனிநபர்களை பாதுகாப்பதற்கென, மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும். அரசியலமைப்பு விழுமியங்களைப் பின்பற்றி தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் இணையர்களை இச்சட்டம் பாதுகாக்க வேண்டும். மேலும், அத்தகைய இணையர்களின் திருமணம், குடும்ப உறுப்பினர்களின் எவ்விதத் தலையீடும் இன்றியும், குடும்ப உறுப்பினர்களே சாட்சியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இன்றியும் நடைபெறுவதை எளிதாக்கும் வகையிலான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
