திருச்சி: முதல்வர் விஜய், திருச்சி பொதுக்கூட்டத்தில் மின்வெட்டு, பாலியல் பலாத்காரம், கொலைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகள் குறித்து பேசாமல் சென்றது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் விஜய் பேசுகையில், ‘‘கடந்த 1977ல் எம்.ஜி.ஆருக்கு போடாத ஓட்டை, 2026ல் எனக்கு போட்டுள்ளீர்கள். நான் என்னை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடவில்லை.
ஆனால் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் வந்த உங்களின் அண்ணன், தம்பியாகிய இந்த விஜய் மீது மக்கள் வைத்த நம்பிக்கை எதிர்காலத்திலும் தொடரும். கொஞ்சம் இன்னும் அதிகமாக ஆதரித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும், பரவாயில்லை. குதிரை பேரம் பண்ணுகிறார், அது பண்ணுகிறார் என்று தப்பு தப்பாக பேசி வருகின்றனர். மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது. மாநில உரிமைகள், நதிநீர் உரிமைகள், சமூக நீதி, சமநீதி, சமத்துவ நீதி ஆகியவற்றில் டிவிகே அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
லஞ்சமில்லாத, ஊழலில்லாத ஆட்சியை ஒரே நாளில் மேஜிக் போல மாற்ற முடியாது’’ என்றார். கரூரில் பிரச்னைக்குள்ளான பஸ்சில் நின்றுதான் முதல்வர் விஜய் நேற்று பேசினார். அப்போது எழுதிக் கொடுத்த பேப்பரை கையில் வைத்துக் கொண்டு சினிமா வசனம்போல வாக்கியத்தை ஏற்ற, இறக்கத்துடன் படித்தார். தேர்தல் முடிந்து விட்டது என்ற நினைப்பே இல்லாமல், தேர்தல் பிரசாரத்தில் பேசியதைப் போல் மீண்டும் கத்தி, கத்தி பேசினார். அப்போது திமுக, தவெகவுக்குத்தான் போட்டி என்று மீண்டும் தெரிவித்தார்.
அதேபோல அல்லு, சில்லு கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகளை கேவலமாக சித்தரித்துப் பேசினார். அப்படி கேவலமாக சித்தரித்து பேசிய கட்சிகளுடன்தான் தற்போது கூட்டி வைத்துள்ளதாக அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சினிமா கவர்ச்சியில் வென்று விட்டதாக எதிர்க்கட்சியினர் பேசுவதாக குறிப்பிட்டார். மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்தி, மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வரும்போதெல்லாம் போராட்டங்களை நடத்தியதோடு, கடும் சட்டப்போராட்டங்களை நடத்தி திமுக, அதிமுக தேர்தலை சந்தித்த நிலையில், தவெக மட்டும் சினிமா கவர்ச்சியை நம்பி தேர்தலில் நின்று விட்டு இப்போது அப்படி நிற்கவில்லை என்று பேசுவது வேடிக்கை என்றும் நெட்டிசன்கள் வறுத்ததெடுத்து வருகின்றனர்.
மேலும், அவர் நேற்றும் மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசவே இல்லை. மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று கர்நாடகா புதிய முதல்வர் சிவக்குமார் கூறுகிறார். அதைப் பற்றி வாயே திறக்கவில்லை. தமிழகம் முழுவதும் பல இடங்களின் மின்வெட்டு உள்ளது. கோவை, நாமக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளைகள் என்று சட்டம் ஒழுங்கு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் இலங்கை தமிழ் அகதி பெண் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்தும் ஒரு வரி கூட பேசவில்லை. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 என்று பாடியவர், இப்போது, பாட்டிலுக்கு ரூ.20 வாங்குவது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. எல்லா டாஸ்மாக் கடையிலும் தகராறு, அடிதடி நடக்கிறது. 771 கடைகள் மூடப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான கடைகள், பள்ளிகள், கோயில்கள் அருகே இருப்பதால், மக்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை.
திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூச முயற்சி நடக்கிறது. அதுபற்றியும் கருத்து தெரிவிக்கவில்லை. அதோடு பாஜக குறித்தோட, மும்மொழிக்கை கொள்கை குறித்தோ, ஒன்றிய அரசு நிதி வழங்காதது குறித்தோ, ஒன்றிய பாஜ அரசின் பல்வேறு திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு குறித்தோ எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆனால் வழக்கம்போல, சினிமா டயலாக்குகளை பேசிவிட்டுச் சென்றார். இது திருச்சி மக்களுக்கு மட்டுமல்ல தவெகவினருக்கே பெரிய ஏமாற்றமாக இருந்ததாக நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்..
சினிமா கவர்ச்சியை நம்பி தேர்தலில் நின்று விட்டு இப்போது அப்படி நிற்கவில்லை என்று பேசுவது வேடிக்கை என்று நெட்டிசன்கள் வறுத்ததெடுத்து வருகின்றனர். மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று கர்நாடகா புதிய முதல்வர் சிவக்குமார் கூறுகிறார். அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.
