×

சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகளால் மாணவர்களுக்கு இருண்ட காலமாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்த ஆண்டு 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத் தாள் திருத்துவதற்காகப் புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான ‘திரைவழி மதிப்பீட்டு முறையை’ அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக விடைத் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றிய பிறகு ஆசிரியர்கள் அதனை மதிப்பீடு செய்வார்கள் என்று கூறப்பட்டது.

இந்த ஆண்டு அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாள்களில் 13,000 தாள்கள் வாசிக்க இயலாத அளவிற்கு இருந்ததாகவும் அதனால் கைகளால் திருத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இதனால் பல மாணவர்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதும் அதிக அளவில் தேர்ச்சி விகிதம் குறைந்தும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த போது விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாதது அம்பலமாகி இருக்கிறது. கடுமையாக உழைத்து படித்த மாணவர்கள் ஐஐடி என்ஐடி போன்ற உயர் படிப்புகளுக்கு செல்ல முடியாத சூழலையை ஒன்றிய அரசு உருவாக்கி இருக்கிறது.

சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மார்க்கிங் மதிப்பீட்டு டெண்டரில் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக விதிகள் தளர்த்தப்பட்டதாக ஜார்க்கண்ட் மாணவர் ஒருவர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளதை புறம் தள்ள முடியாது. ஒன்றிய கல்வி அமைச்சரும் சிபிஎஸ்இ விடைத்தாள் குளறுபடியில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்தற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி, கியூட் ஆகிய 4 தேர்வுகளிலும் குளறுபடிகள் நடைபெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது தென்னிந்தியாவை சேர்ந்த மாணவர்களாகவே இருப்பதும் கவனத்திற்குரியது. நுழைவுத் தேர்வுகள் அவசியமற்றவை என்பதற்கு இது மற்றொரு சான்று. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Central Board of Secondary Education ,CBSE ,
× RELATED கோடை விடுமுறை முடிந்து சென்னை...