×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை கண்டு ரசித்த 23 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள்

 

குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடந்த பழக்கண்காட்சியை 23 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில், உலகப் புகழ்பெற்ற 66-வது பழக்கண்காட்சி கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெற்றது. ​இந்த ஆண்டு பழக்கண்காட்சியின் முக்கிய அம்சமாக, பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஜூராசிக் பார்க்’ டயனோசர் உருவங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்தன.

குழந்தைகளும், பெரியவர்களும் இந்த பழ அலங்கார உருவங்களை கண்டு ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இது மட்டுமின்றி, பூங்காவில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களும், பொழுதுபோக்கு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இடைபட்ட நாட்களில் நடத்தப்படும் பழக்கண்காட்சி, இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி மாதத்தின் இறுதி வாரத்தில் நடத்தப்பட்டது. பள்ளிகள் திறக்கும் காலம் நெருங்கும் என்பதால் பழக்கண்காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையக்கூடும் என்று தோட்டக்கலைத்துறையினர் முதலில் சந்தேகம் அடைந்தனர்.

ஆனால், தோட்டக்கலைத்துறையினரின் சந்தேகத்தைப் பொய்யாக்கும் விதமாக, இந்த ஆண்டு சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ​கடந்த ஆண்டு 17,834 சுற்றுலா பயணிகள் மட்டுமே பழக்கண்காட்சியைப் பார்வையிட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து பழக்கண்காட்சியை கண்டு ரசித்துள்ளனர்.

Tags : Gunnar Sims Park ,Gunnar ,Kunnur Sims Park ,Nilgiri district ,familiarization fair ,
× RELATED வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக