×

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை-தென்கலை பிரிவினர் மீண்டும் கோஷ்டி மோதல்; கைகலப்பால் பதற்றம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதையொட்டி கோயில் வளாகத்தில் இருந்து பல்வேறு வாகனங்களில் வரதராஜ பெருமாள் புறப்படுவார். இதற்காக, பெரிய காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் மண்டகப்படி கண்டருளி பூஜைகள் நடைபெற்ற பின்னர் ராஜ வீதியில் வலம் வந்து வரதராஜ பெருமாள் கோயிலுக்கு திரும்புவார்.

சுவாமி வீதியுலா வரும்போது, முன்பகுதியில் தென்கலை பிரிவு ஐயங்கார்கள் திவ்ய பிரபந்தம் பாடல்களை பாடி செல்லவும், வடகலை பிரிவு ஐயங்கார்கள் சுவாமிக்கு பின்புறம் வேத பாராயணத்தை பாடி செல்லவும் நீதிமன்றம் வழிகாட்டி உத்தரவிட்டுள்ளது. நேற்று மாலை சந்திரபிரபை நிகழ்ச்சியின்போத வடகலை-தென்கலை பிரிவினர் இடையே லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 5வது நாளான இன்று உற்சவமாக சந்திரபிரபை வாகனத்தில் தங்க பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளும் வீதியுலா வந்தார். கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளிய போது திவ்ய பிரபந்த பாடல்கள் பாடிய தென்கலை பிரிவினரும், வேத பாராயணம் பாடி வந்த வடகலை பிரிவினரும், கோஷ்டியில் வருவது, பாடல் பாடுவது, ஏன் பூஜை செய்வது என என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்புக்கு வந்த போலீசார், இரு பிரிவினரையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

பிரம்மோற்சவத்தின் போது வடகலை, தென்கலை பிரிவு ஐயங்கார்கள் ஏதாவது புதிய புதிய பிரச்னைகளை செய்து தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பொதுமக்களும் பக்தர்களும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமப்படுவதோடு, இவர்களது செயல்கள் அருவருப்பாக உள்ளது என முகம் சுளித்து செல்கின்றனர்.இ தே நிலை தொடர்ந்து நீடிக்கும் நிலையில் இந்து சமய‌ அறநிலையத்துறை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனும் கோரிக்கை பக்தர்களிடையே எழுந்துள்ளது.

Tags : Kanji Varadaraja Perumal ,Temple ,Brahmorsavam ,Kanchipuram ,Varadaraja Perumal ,Vaikasi Brahmorsavam ,Gangaikondan ,
× RELATED கோவை காரமரத்தூர் அருகே புலம்பெயர்...