கூடலூர்: கூடலூர் அருகே காரின் கண்ணாடியை உடைத்து, மாம்பழங்களை தின்றுவிட்டு காரை கவிழ்த்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பகத் அப்துல்லா பைசல் என்பவர் தனது நண்பர்களுடன் காரில் நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள மாவனல்லா பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்து தங்கினார். விடுதிக்கு முன்புறம் சாலை ஓரத்தில் காரை நிறுத்தினார். நேற்று அதிகாலை காட்டு யானை ஒன்று காரின் அருகில் நிற்பதை பார்த்துள்ளனர்.
காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த மாம்பழம் உள்ளிட்ட பழங்களை காட்டு யானை சாப்பிட்டுள்ளது. பின்னர் மேலும் பழங்களை தேடி காரை தலை கீழாக கவிழ்த்தது. இதில் கார் சேதம் அடைந்தது. பின்னர் காட்டுக்குள் யானை சென்றுவிட்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து வனத்துறையினர் அந்த பகுதியில் வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.
