×

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 2 குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானை

 

குன்னூர்: சமவெளி பகுதிகளில் கோடை வெயில் தாக்கம் காரணமாக நீர்நிலைகள் காய்ந்து தண்ணீர், உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவுதேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், சமவெளி பகுதியிலிருந்து நீலகிரி மலைப்பகுதிக்கு பெருமளவில் இடம்பெயரத் தொடங்கி உள்ளன.

​குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தின் முக்கிய மலைப்பாதைகளான குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. ​மலைப்பாதைகளில் யானைகள் நடமாடுவதை கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரங்களில் வரும் யானைகளை மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவ்வப்போது காட்டு யானைகள் தங்களது குட்டிகளுடன் சாலையோர பகுதிகளுக்கு வந்து விடுகின்றன. ​

இந்த நிலையில், இன்று காலை குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள கோழிக்கரை பகுதியில் 2 குட்டிகளுடன் ஒரு காட்டு யானை சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள், காட்டு யானைகளின் ஆபத்தை உணராமல், தங்களது வாகனங்களை நிறுத்தி செல்போன்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். யானை மற்றும் அதன் குட்டிகள் மிக அருகில் நின்றுகொண்டிருந்த போதிலும், பலர் அத்துமீறி செயல்பட்டனர்.

குட்டிகளுடன் அந்த யானை மெதுவாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. ​இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே தேவையற்ற மோதல்களை உருவாக்கக்கூடும். எனவே, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு அருகே சென்று அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கண்காணித்து, அவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Coonoor-Mettupalayam ,Coonoor ,
× RELATED வாடகை சக்தியை வீழ்த்தப் போகும் உண்மையான மக்கள் சக்தி அதிமுக