30.5.2026 – சனி வைகாசி விசாகம்
2026-ஆம் ஆண்டிற்கான வைகாசி விசாகம் மே 30, சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதரித்த இத்திருநாள், தமிழ் மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, முருகனின் தோத்திரங்களை சொல்லிக்கொண்டே, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, முருகப்பெருமான் படத்தின் முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். திருப்புகழைப் பாராயணம் செய்யலாம். ஆறெழுத்து மந்திரங்களான “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை நாள் முழுவதும் பாராயணம் செய்யலாம். முருகப் பெருமானுக்கு அரளி, செம்பருத்தி போன்ற செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்யலாம். இந்த நன்னாளில் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் மோர், பானகம் வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
30.5.2026 – சனி சிதம்பரம் தேவாதி தேவன் தங்க கருட சேவை
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்துள்ள திருச் சித்ரகூடம் கோவிந்தராஜ பெருமாள் (தேவாதி தேவன்), 108 வைணவத் திவ்ய தேசங்களில் 40-வது திருத்தலமாகும்.
“எய்யச் சிதைந்த திலங்கை மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி ஆநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான் சித்திர கூடத்துள் ளானே’’
– என்று தெய்வ புள் என்னும் கருடன் மீது ஆரோகணித்து வருவதை திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். இத்தலத்தில் பெருமாள், வைகாசி விசாகமான இன்று தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
30.5.2026 – சனி திருமோகூர் ரதம்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 .கி.மீ தொலைவில் ஒத்தக்கடை அருகே அமைந்துள்ளது. கோயில் கலைச் சிறப்புகள் இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சி புரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நதி உயரமான அதிட்டானத்தின் மீது அமைக்கப் பட்டுள்ள கட்டுமான கற்கோயிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார். பிரசித்தி பெற்ற வைகாசி திருநாளில், இன்று ரத உற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது.
30.5.2026 – சனி நம்மாழ்வார் திருநட்சத்திரம்
திருநெல்வேலிக்கு அருகே, தாமிர பரணி நதிக்கரையில் திருக்குருகூர் திருத்தலம். இப்போது ஆழ்வார் திருநகரி. தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு யோகி இருந்தார். ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் தினமும் குருகூர் வீடுகளின் முன் கிடக்கும் எச்சில் இலை உணவை உண்டு திரும்பும். ஒருநாள் வழக்கம்போல் திருநகரிக்குச் சென்ற நாய் ஆற்றைக் கடந்து வரும்பொழுது வெள்ளம் வந்து விட்டது. வெள்ளத்தை கடக்க முடியவில்லை. நட்டாற்றில் வெகு நேரம் போராடிய நாய், நீரில் மூழ்கியது. இதை யோகி கரையில் நின்று பார்த்தார். நாயின் மண்டையின் வழியே ஓர் ஜோதி மேலே சென்றது. யோகி பெரும் வியப்படைந்தார். நாய் வீடுபேறு பெற்றதை எண்ணினார். ஆழ்வார் தமிழ் ஒலித்த திருநகரியில் வாழும் வைணவர்கள் சாப்பிட்ட இலையிலிருந்த மீதத்தை உண்டதால்தான் அந்த நாய்க்கு அரும்பெரும்பேறு கிடைத்தது என்பதை உணர்ந்தார். இதை விளக்கும் பாட்டு இது.
“வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடமளித்தால் பழுதோ? பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவிச்சொல்லு ஞான தமிழ்க்கடலே!’’
நம்மாழ்வாரின் அருளால் அந்த யோகியும் பரமபதம் அடைந்தார். இவ்வளவு பெருமை அந்தத் தலத்துக்கு வரக் காரணமாக அமைந்தவர்தான் ஸ்வாமி நம்மாழ்வார். அவருடைய அவதார தினம் வைகாசி விசாகம். எல்லாப் பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் இல்லங்களிலும், ஆழ்வாரின் அவதாரத் திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆழ்வார் திருநகரியில் பிரம்மாண்டமான பத்து நாள் உற்சவம் உண்டு. இல்லங்களில் அன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்து நம்மாழ்வாரின் தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்கள்.
30.5.2026 – சனி திருவாய்மொழிப் பிள்ளை திருநட்சத்திரம்
திருமலையாழ்வார் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர்களில் ஒருவர். திருமலையாழ்வார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை ஆகும். இவர் திருவாய் மொழிப் பிள்ளை எனச் சிறப்புப் பெயர் பெற்றவர். வடமொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர், அந்நூல்கள் காட்டும் கண்ணனை விடத் திருவாய்மொழி நூலில் காட்டப்படும் கண்ணன் மேலானவன் என உணர்ந்தார். இதனால், தன் மாணவர் மணவாள மாமுனிகள் என்பவருக்கு தாம் திருநாடு செல்லும் காலத்தில் (இறக்கும் தருவாயில்) தம் ஏனைய மாணவர்களை மணவாள மாமுனிகளிடம் ஒப்படைத்துவிட்டு இதனைக் கூறினார். “சமஸ்கிருத சாஸ்திரத்தில் பலகால் கண் வையாதீர். இராமானுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு எழுதிய விளக்க உரையான ஸ்ரீ பாஷ்யத்தை உணர்ந்து அதனைப் பிரவசனம் செய்துகொண்டு திருவரங்கத்திலேயே நித்திய வாசம் பண்ணும்’’ திவ்வியப் பிரபந்தங்களின் உள்நோக்கங்களையும், வைணவ சம்பிரதாயங்களையும் மணவாள மாமுனிகளுக்குப் புகட்டியவர். அவர் அவதார நாள் இன்று.
31.5.2026 – ஞாயிறு கூடல் அழகர் ரதம்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் 47வது தலமாகும். இங்கு தேர்த் திருவிழா, ஆண்டு தோறும் வைகாசி மாதம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வியூக சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருள, பக்தர்கள் `கோவிந்தா’ கோஷம் முழங்க தேரை வடம்பிடித்து இழுப்பர்.
31.5.2026 – ஞாயிறு திருவரங்கப் பெருமாள் அரையர் திருநட்சத்திரம்
திருவரங்கப் பெருமாள் அரையர், ஸ்ரீ வைஷ்ணவ குருபரம் பரையில் மிகவும் போற்றப்படும் ஆச்சாரியாரும், ஸ்ரீ ஆளவந்தாரின் திருக்குமாரரும் ஆவார். இவர் ஸ்ரீ ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்களில் ஒருவராவார். ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த அதே ஆண்டான கி.பி. 1017-ஆம் ஆண்டு, வைகாசி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீ ரங்கத்தில் பெருமாளுக்கு `அரையராக’ (இசை மற்றும் அபிநயங்களால் பாசுரங்களைச் சேவை சாதிப்பவராக) இருந்து வந்தார். ஸ்ரீ ராமானுஜரைவிட சுமார் 40 நாட்கள் இளையவரான இவர், காஞ்சிபுரத்தில் இருந்த ராமானுஜரை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வர முக்கிய காரணமாக இருந்தார். அரையர் எம்பெருமானின் நடையழகில் அதிக ஈடுபாடு உடையவர். வடநாட்டிலிருந்து வந்த ஒரு பக்தரை, தானே அழைத்துச் சென்று திருவரங்கனின் நடையழகைக் காட்டியருளியதுண்டு. அவர் அவதார தினம் இன்று.
2.6.2026 – செவ்வாய் திருநீலநக்கர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் குருபூஜை
திருநீலநக்கர், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய மூன்று நாயன்மார்களும் சமகாலத்தவர். இவர்களுடைய குருபூஜை ஒரே தினத்தில் வருகிறது. காரணம், திருஞானசம்பந்தரிடம் குரு பக்தியோடு பழகியவர்கள் திருநீலநக்க நாயனாரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும். பல திருத்தலங்களுக்குச் சென்றனர். ஞானசம்பந்தரின் திருக்கல்யாணம் ஆச்சாள்புரத்தில் நடைபெற்றது. அந்த கல்யாணத்திற்கு புரோகிதராக இருந்தவர், திருநீலநக்கர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒருவர். அன்றைய தினம் ஞானசம்பந்தரோடு எல்லோருக்கும் முக்தி கிடைத்தது. அந்த குருபூஜை தினம் இன்று.
3.6.2026 – புதன் குமரகுருபரர் குருபூஜை
ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் ஆவார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாய்ப் பிறந்தவர். திருச்செந்தூர் செந்தில் வேலன் அருளால் பிறந்தவர். குழந்தை 5 வயது ஆகியும் பேச்சுத்திறன் இல்லாமல் இருந்ததைப் பார்த்த பெற்றோர், செந்தில் வேலனிடமே வேண்ட, முருகனின் அருளால் பேசும் திறனை அடைந்தவர். முருகன் மீது கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர், மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டு கோளுக்கு இணங்க, மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் இயற்றினார். குமரகுருபரர் காசிக்குச் சென்று காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவி சைவ சமயத்தை வளர்த்தார். காசிமடம் திருப்பனந்தாளிலும் உள்ளது. மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணி மாலை, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக் கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும். அவர் குருபூஜை இன்று.
4.6.2026 – வியாழன் சங்கடஹர சதுர்த்தி
குரு தட்சிணாமூர்த்திக்குரிய உரிய வியாழக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி வருகிறது. சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது, விநாயகப் பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும். விநாயகப் பெருமானை, எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அருமையான விரதம். `சங்கஷ்டம்’ என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் கடை பிடிக்கப்படவிருக்கிறது. சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும். பிள்ளையாரை 11 முறை வலம் வரவேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.
5.6.2026 – வெள்ளி திருவோணம்
27 நட்சத்திரங்களில் திருவாதிரை, திருவோணம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் மங்களகரமான நட்சத்திரங்கள். இரண்டு நட்சத்திரத்திலும் திரு என்கின்ற அடையாளம் உண்டு. திரு என்பது செல்வத்தைக் குறிப்பது. பல அன்பர்கள் மாதா மாதம் திருவோண நட்சத்திரம் அன்று பெருமாளை நினைத்து விரதம் இருப்பார்கள். பல்வேறு ஆலயங்களில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். ஒரு சில இடங்களில் பிராகார புறப்பாடும் உண்டு. சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்தில் விரதம் இருப்பதை “ச்ரவண விரதம்” என்று கூறுவார்கள். திருவேங்கடமுடையான் திருநட்சத்திரம் திருவோணம் என்பதால், அன்று உபவாசம் இருப்பவர்கள் திருமலையப்பன் பேரருளைப் பெறுவார்கள்.
