×

தலையெழுத்தை மாற்றும் சக்தி வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் என்பது முருகப் பெருமான் அவதரித்த திருநாளாகும். இது வெறும் பண்டிகை மட்டுமல்ல, நமது தலையெழுத்தையே மாற்றியமைக்கும் சக்தி வாய்ந்த ஒரு நாள் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினமே, இந்த சிறப்பு வாய்ந்த நாளாகும். நம் வாழ்க்கை மாறுவதற்கு வைகாசி விசாகத்தன்று முருகனை நினைத்து சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்வோம். ஏன் விசாக நட்சத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது? விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்கள் ஒன்று கூடிய ஒரு நட்சத்திரம். முருகப் பெருமானும் ஆறு திருமுகங்களோடு திகழ்பவர் என்பதால், இந்த நட்சத்திரத்தில் அவர் அவதரித்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஆறு முகங்களும் ஞானம், வீரம், கருணை, ஐஸ்வர்யம், ஒளி மற்றும் அனைத்தையும் காக்கும் தன்மை போன்ற முருகனின் பல்வேறு அம்சங்களைக் குறிக்கின்றன. புராணங்களின்படி, தீய சக்திகளான சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் போன்ற அசுரர்களால் உலக உயிர்களும, தேவர்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த போது, அவர்களைக் காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றி, ஆறுமுகப் பெருமானாக முருகன் அவதரித்தார்.
தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இந்த நிகழ்வு, நம் வாழ்வில் ஏற்படும் தடைகளையும், தீய வினைகளையும் அகற்றும் சக்தி முருகனுக்கு உண்டு என்பதை உணர்த்துகிறது.
வைகாசி விசாகத்தன்று முருகனை முழு மனதுடன் வழிபடுபவர்களுக்கு, அவருடைய அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக அறியாமல் செய்த பாவங்கள் நீங்கி, புண்ணியங்கள் சேரும். திருமணம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற வாழ்வின் முக்கிய நிகழ்வு களில் இருக்கும் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால், நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
எமதர்மராஜனும் இந்த விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால், இந்த நாளில் முருகனை வழிபடுவது நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது.
முருகனின் ஞான சக்தி, பக்தர்களின் மனக் குழப்பங்களைப் போக்கி, தெளிவான சிந்தனையையும் மன அமைதியையும் அளிக்கும்.
“ஓம் சரவண பவ”, “ஓம் சரவணபவாய நம” போன்ற முருகனுக்குரிய மந்திரங்களை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். வேல்மாறல், கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் போன்ற பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.
வைகாசி விசாகம் மந்திரம்:
“விசாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமி நம் க்ருத்திகா ஸுதம்!
ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம் வந்தே ஸிவாத்மஜம்’’
பொருள்: விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவரும், கார்த்திகை தேவிகளால் வளர்க்கப்பட்டவரும், எப்பொழுதும் குழந்தை வடிவமாக திகழ்பவரும், ஜடை தரித்தவரும், சிவபெருமானின் மகனுமான ஸ்கந்தனை வணங்குகிறேன். இந்த மந்திரத்தை 18 முறை மனதார உச்சரிக்கலாம்.

Tags : Vygasi Visakam ,VIKASI VISAKAM ,MURUGAB PERUMAN ,Pournami ,Vygassi ,
× RELATED நல்லபாம்பை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது ஏன்?