×

நல்லபாம்பை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது ஏன்?

? நல்லபாம்பை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது ஏன்?
– எஸ்.கதிரேசன், வேலூர்.

சர்ப்பம் என்கிற பாம்பினை தெய்வங்களின் ஆபரணமாக உருவகப்படுத்தி இருப்பார்கள். நவகிரஹங்களில்கூட கேது என்கிற கிரஹத்தினை ஐந்து தலை நாகத்தின் தலையை உடையதாக வடிவமைத்து இருப்பார்கள். இந்த கேதுவைத்தான் ஞானகாரகன் என்றும் சொல்வார்கள். ஆக, ஞானத்தைத் தருவது கேது என்பதால் அந்த பாம்பின் வடிவத்தையே தெய்வ மூர்த்தங்களின் தலைப்பகுதியில் இடம்பிடித்திருப்பது போல் சித்தரித்திருப்பார்கள். அதே போல, இரு நாகங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருக்கும் உருவத்தினையும் சிலையாக வடிவமைத்து அதனை அரசமரத்தடியில் வைத்து வணங்கி வருவார்கள். குறிப்பாக பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இதனை வணங்கிவந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் சொல்வார்கள்.

இதற்குக் காரணம், மனிதனின் ஜீன்களை ஆராயும்போது டிஎன்ஏ, ஆர்என்ஏ ஆகியவை இரண்டு பாம்புகள் பின்னிக் கொண்டிருக்கும் அமைப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் இன்று குறிப்பிடுகிறார்கள். இந்த உண்மையை அன்றே அறிந்திருந்த நம் முன்னோர்கள், இந்த அமைப்புதான் பிறப்பினைத் தருகிறது என்று அதனை வழிபட வலியுறுத்தினார்கள். அதேபோல நவகிரஹங்களில் உள்ள குருவை புத்ரகாரகன் என்று சொல்வார்கள். அந்த குருவிற்கு உரிய சமித்து (குச்சிகள்) ஆக அரச சமித்தினைச் சொல்வார்கள். ஆக அரசமரம் என்பது புத்ரகாரகன் ஆகிய குருவின் ஆதிக்கத்தைப் பெற்றது. அதனால்தான் புத்ரபாக்யம் வேண்டி வருவோர் அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நாகங்களின் வடிவத்தை வணங்குகிறார்கள். அந்த பாம்புகள் வசிக்கும் புற்று உள்ள இடத்தில் தெய்வ சாந்நித்யம் இருப்பதாக நம்பினார்கள். அது உருவகம்தானே தவிர உண்மையான பாம்பினை வணங்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லவில்லை. கோபூஜை எனும் பசுமாட்டிற்கு பூஜை செய்து வணங்குவது, கஜபூஜை எனும் யானைக்கு பூஜை செய்து வணங்குவது ஆகியவற்றை சாஸ்திரம் பேசுகிறது. ஆனால் உண்மையான பாம்பினை நேரடியாக வைத்து பூஜை செய்யும் முறையை சாஸ்திரம் ஏற்கவில்லை. இது முற்றிலும் தவறானது. வாராஹி அன்னையை பூஜை செய்கிறேன் என்று யாராவது உண்மையான பன்றியைக் கொண்டு வைத்து பூஜை செய்து வணங்குவார்களா? மேலும் பாம்பில் நல்லபாம்பு என்ற ஒன்று கிடையாது. எல்லா பாம்புமே கெட்டபாம்புதான். அது தீண்டினால் விஷம்தான். நமது அண்டை மாநில மொழியான தெலுங்கில் நலுப்பு அல்லது நல்ல என்று சொன்னால் கருமை என்று பொருள். நல்லபாம்பு என்றால் கருநாகம் என்று பொருள்.

தமிழ் இலக்கியங்களில் எங்குமே நல்லபாம்பு என்ற வார்த்தை காணப்படவில்லை. கவியரசர்கூட நாதர்முடி மேல் இருக்கும் நல்லபாம்பே உனக்கு நல்லபெயர் வைத்தது யார் சொல்லு பாம்பே என்றுதான் பாடியிருப்பார். ஆக, உண்மையான நல்லபாம்பினை தெய்வம் என்று கருதி வணங்கவேண்டிய அவசியம் இல்லை. நாகத்தின் உருவத்தை மட்டும் தெய்வமாக நினைத்து வணங்கினால் போதுமானது.

? பரம்பரை நோய் இருக்கிறது என்று கூறுகிறார்களே, உண்மையா?
– வண்ணை கணேசன், சென்னை.

உண்மைதானே. சர்க்கரை வியாதி போன்றவை பரம்பரையாக வருவதை மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்களே. ஜோதிடவியல் ரீதியாக மரபணுக்களை கடத்தும் கிரஹங்களாக ராகு – கேதுக்களைச் சொல்வார்கள். இந்த ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலையே பரம்பரை வியாதிகளைத் தருகிறது என்பதை ஜோதிடமும் வலியுறுத்துகிறது. ஆக, பரம்பரை வியாதி என்பது உண்மையே. அதே நேரத்தில், எல்லா வியாதிகளும் பரம்பரை வியாதிகள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

? தேர்த் திருவிழாவின் தத்துவம் என்ன?
– சீதா லட்சுமி, அடையாறு – சென்னை.

தேர்த் திருவிழா (ரதோத்சவம்) என்பது கோயில்களில் நடைபெறும் முக்கியமான நிகழ்வாகும். இது வெறும் விழாவாக மட்டும் அல்லாது, ஆழமான தத்துவ அர்த்தங்களைக் கொண்டது. கடோபநிஷத், மனித உடலை தேரோடு ஒப்பிடுகின்றது.

தேர் – மனித உடல்.
குதிரைகள் – ஐம்புலன்கள்.
கயிறு (கயிறு/கட்டுப்பாடு) – மனம்.
சாரதி – புத்தி.
உட்கார்ந்திருக்கும் இறைவன் – ஆத்மா.

மனமும் புத்தியும் கட்டுப்பாட்டில் இருந்தால், புலன்களை அடக்கி ஆத்மா இறைவனை அடையும். தேர் இழுப்பது அனைவரும் சேர்ந்து செய்யும் செயல். வாழ்க்கையில் முன்னேற ஒற்றுமை அவசியம். ஒருவரால் மட்டும் ஆன்மிக உயர்வு சாத்தியமில்லை; சமூகம் துணை நிற்க வேண்டும். தேர்த்திருவிழா என்பது ஊரில் உள்ள அனைவரும் பங்கு பெறக் கூடிய ஒரு நிகழ்ச்சி. ஊர்கூடி தேர் இழுத்தல் என்பார்கள். தேர் என்பது மிகப் பெரியது. தனி ஒரு மனிதனால் அதை நகர்த்த முடியாது. ஊரில் உள்ள அத்தனை பேரும் சேர்ந்து வடம் பிடித்து இழுக்கின்ற பொழுது நகர்ந்துவிடும். ஒற்றுமையாக ஒரு பிரச்னையைக் கையாளுகின்ற பொழுது, எத்தனைப் பெரிய பிரச்னையாக இருந்தாலும், இறையருளால் நீங்கிவிடும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

? ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்ய  வேண்டும்?
– தீபா குமாரி, திருப்பூர்.

ஒவ்வொரு நாளின் மகிழ்ச்சி என்பது அன்றைக்கு காலையில் நாம் எந்த
மனநிலையில் படுக்கையை விட்டு எழுகிறோம் என்பதில் தொடங்குகிறது. தொடக்கம் நன்றாக இருந்தால் நாளும் நன்றாக இருக்கும். ஆகையினால், படுக்கையை விட்டு எழுகின்ற பொழுது பிரார்த்தனை செய்யுங்கள். மன மகிழ்ச்சியோடு இருங்கள். உற்சாகமாக எழுங்கள். சிரித்துப் பேசுங்கள். இந்த கலகலப்பும், சிரிப்பும் உங்களை அந்த நாள் முழுவதும் நல்ல நிலையில் உற்சாகமாக வைத்திருக்கும். பிரச்னைகள் வந்தாலும்கூட அதனைத் தெளிவாகச் சமாளிக்கும் வழிமுறைகள் உங்களுக்குத் தோன்றும்.

? வேற்றுக் கிரகங்களில் உயிர்கள் வாழ்வதை இன்றைய விஞ்ஞானம் ஏற்கிறதா?
– சிவக்குமார், விருகம்பாக்கம் – சென்னை.

விஞ்ஞானம் ஏற்கிறதா என்பதைவிட, இதுவரைக்கும் அப்படி இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானம் மறுக்கவும் இல்லை. அண்டங்களைக் கடந்து வேற்றுக் கிரகங்களில் உயிர்கள் இருக்குமா என்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆய்வு முடியாதவரை, அறிவியலால் ஒரு விதமான முடிவையும் சொல்ல முடியாது. ஆனால், மெய்யியல், பல்லாண்டு காலமாக அண்டாதி அண்டங்களைப் பற்றியும், அண்ட உயிர்கள் பற்றியும் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றது. வள்ளலார், “அண்ட வகை எவ்வளவோ அவ்வளவு அவற்றின் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவு அவைகள்’’ (திருவருட்பா 4169) என்று திருவருட்பாவில் பாடியதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Tags : S. Kathiresan ,Vellore ,Navagrahas ,Ketu ,Gnanakarakana… ,
× RELATED சொன்னதைக் கேட்போம்! துயரம் விலகிப்போம்!