×

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி இளவரசன் விலகல்: எடப்பாடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

 

திருச்சி: திருச்சியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்பியும், கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான இளவரசன் இன்று அளித்த பேட்டி: அதிமுகவில் 42 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்து வருகிறேன். எனக்கு பல்வேறு பொறுப்புகளை ஜெயலலிதா கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் இன்றைக்கு மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். பொது செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக தோற்றால், நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறுவார். ஆனால் தோல்விகளுக்குத் தான் பொறுப்பேற்பதாக எடப்பாடி ஒருமுறை கூடக் கூறியதில்லை.

நான் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு அணிகளை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறி விட்டார். அவரது பிடிவாதப்போக்கே அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு காரணம் ஆகும். தோல்விகள் குறித்து ஒவ்வொரு முறையும் எடப்பாடியிடம் நேரில் சுட்டிக்காட்டியும், அவர் யார் பேச்சையும் கேட்பதில்லை. முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவதை அவர் இன்னும் உணரவில்லை. எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றாலும், எம்.ஜி.ஆரின் சில கொள்கைகளை முதலமைச்சர் விஜய் தற்போது பின்பற்றி வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் விஜயிடம் இருக்கிறது.

ஒருவகையில் அதிமுகவில் தற்போதைய பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்பட்டால் எனது அரசியல் நிலைப்பாடு மாறும். இவ்வாறு இளவரசன் கூறினார்.

Tags : Prince ,Trichy ,Jayalalitha ,
× RELATED சொல்லிட்டாங்க…