சென்னை: விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்ல தேவையான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வெற்றியாளார்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 20 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு தலா ரூ.4 லட்சம் வரை தேவை அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், வெளிநாட்டில் பயிற்சி மற்றும் போட்டி தொடர்பான செலவுகளுக்கு இந்த நிதி உதவுகிறது.
மேலும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட வீரர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விளையாட்டு கருவிகளும், பொருட்களும் வாங்குதல், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுதல், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்றல் போன்றவற்றிற்கு இந்த நிதி உதவுகிறது. அதேபோல், ஒலிம்பிக் போட்டிகளிலும், ஏனைய பன்னாட்டு அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் தேவை அடிப்படையிலான உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, ஒருவருக்கு ஆண்டொன்றிற்கு தலா ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்கும் வகையில், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் செஸ் விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், சர்வதேச மற்றும் உலகளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் முனைப்போடு தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.
