சென்னை: தமிழ்நாட்டில் குதிரை பேரத்தை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்று தவெக மீதான குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்தார். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 62ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவபடத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ெசல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழச்சியில், மாநில துணை தலைவர்கள் சொர்ணா சேதுராமன், உ.பலராமன், இதாயதுல்லா, தேசிய செயலாளர் சி.டி.மெய்யப்பன், முன்னாள் எம்பி ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு, அசோகன், ஓபிசி பிரிவு துணை தலைவர் துறைமுகம் ரவிராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: யார் முதல்வராக பதவி ஏற்றாலும் பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கமான ஒன்று.
அதன் அடிப்படையில் எங்களது கேரள மாநில முதல்வரும் பிரதமரை சந்தித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டால் அதை நாங்கள் எதிர்ப்போம். தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை தமிழக காங்கிரஸ் என்றைக்கும் விட்டுக் கொடுக்காது. இந்த விவகாரம் குறித்து டெல்லி தலைமையிடம் எடுத்து சொல்லுவோம். குதிரை பேரம் எங்கு நடந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் பேரியக்கம் ஒருபோதும் குதிரை பேரத்தை அனுமதிக்காது.
மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குதிரை பேரம் நடந்த போது அதை காங்கிரஸ் வன்மையாக கண்டித்தது. அதை முழுமையாக எதிர்த்தது. அதே அளவு கோல் தான் எல்லா மாநிலத்துக்கும். குதிரை பேர விவகாரத்தில் காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் என்ன நிலைபாட்டில் இருக்கிறதோ அது தான் தமிழகத்திலும் இருக்கும். 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது. உடனடியாக ஒன்றிய பாஜ அரசு இதை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
