×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதல்முறையாக பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு: அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதன்முறையாக முதல்வர் விஜய் நேற்று டெல்லி புறப்பட்டு சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று காலை அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்தித்து பேச முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக முதல்வர் விஜய் நேற்று காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். நண்பகல் 12 மணியளவில் விஜய் டெல்லி சென்றடைந்தார். அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்துக்கும் அவர் முதல் முறையாக சென்றார். இதையடுத்து நேற்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு சென்று மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய் சந்தித்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், மோடியுடன் நடைபெற்ற முதல் சந்திப்பு இது.

இந்த சந்திப்பின்போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டு பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது என்றும், உள்துறை அமைச்சகத்தால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையை தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாக பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்து பாடலை பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்வர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்தினை அனுமதிக்கக் கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், ஒன்றிய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. 2026ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிவித்து, மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய், பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டார். நேற்று இரவு டெல்லியில் தங்கிய முதல்வர் விஜய், இன்று (வியாழன்) காலை அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியையும் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பை முடித்ததும் இன்று மதியம் முதல்வர் விஜய் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

* 10 நிமிடத்தில் மோடி – விஜய் சந்திப்பு நிறைவு
முதல்வர் விஜய் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது, தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் அளித்தார்.  பிரதமர் – முதல்வர் சந்திப்பு வெறும் 10 நிமிடத்தில் முடிந்தது. வழக்கமாக தமிழக முதல்வர் மற்றும் வேறு மாநில முதல்வர்கள் பிரதமரை சந்திக்கும்போது 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை கூட நடைபெறும்.

ஆனால், முதன்முதலாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்து பிரதமரை நேற்று நேரில் சந்திக்க சென்ற விஜய்யுடன் வெறும் 10 நிமிடம் மட்டுமே பிரதமர் நேரம் ஒதுக்கி பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், இதுபோன்று குறைந்த நிமிடங்களில் பிரதமரை சந்தித்து பேசிவிட்டு வந்த தமிழக முதல்வர் விஜய்தான் என்றும் கூறப்படுகிறது.

* விஜய்யை சந்திக்க அமித்ஷா மறுப்பு
பிரதமர் மோடியை முதல்வர் விஜய் நேற்று மாலை 4.30 மணிக்கு சந்தித்தார். அவரை சந்தித்து விட்டு 10 நிமிடத்தில் வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றதால் முதல்வர் விஜய்யை சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று மாலை 5.55 மணிக்கு ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை விஜய் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நீடித்தது. அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் நடைபெற்று வரும் நலத்திட்ட பணிகளுக்கு தேவையான நிதிகளை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. நேற்று இரவு வரை உள்துறை அமைச்சரிடம் இருந்து அழைப்பு வரும் என்று விஜய் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,Vijay ,Modi ,Tamil Nadu Assembly elections ,Chennai ,Delhi ,Vatshu ,Tamil Nadu… ,
× RELATED தஞ்சாவூர் அருகே காவல் நிலையத்தில்...