×

கட்சி அலுவலகமாகவே மாறிய தலைமை செயலகம்; சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க குதிரை பேரத்தை நிறைவேற்றிய தவெக அரசு: அதிமுக எம்எல்ஏக்களை தூக்கிய பரபரப்பு பின்னணி

 

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேரை குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்து தலைமை செலயகத்திலேயே தவெகவில் இணைத்து உறுப்பினர்கள் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் உருவாகியுள்ள புதிய அதிகாரப் போட்டி, தற்போது அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவின் உட்கட்சி பிரச்னையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஆளும் கட்சியான தவெக தனது அரசியல் பலத்தை சட்டமன்றத்தில் அதிகரிக்கும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் திடீரென நேற்று தலைமை செயலகம் வந்தனர். சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை 2.30 மணிக்கு நேரில் சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதங்களை வழங்கினர். இம்மூவரும் அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணிக்குச் சார்பானவர்களாக கருதப்பட்டவர்கள் என்பதால், இந்த ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால், ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 நிமிடத்திலேயே, அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். 3.55 மணிக்கு மூவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டப்பேரவை தலைவர் அறிவிக்கிறார். அதன்பின்னர் அவர்கள் 4.20 மணிக்கு முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகழ்வு சாதாரண கட்சி தாவல் சம்பவமாக இல்லாமல், மிக திட்டமிட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில், நேரடியாக எம்.எல்.ஏ.,க்களை கட்சி மாறச் செய்தால் ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ அமலுக்கு வரும் சூழல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், முதலில் அவர்களிடம் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, பின்னர் கட்சியில் இணைக்கும் யுக்தியை தவெக கையாளுகிறது. இதன் மூலம் காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த இடைத்தேர்தலில், தற்போது ராஜினாமா செய்த அதே எம்.எல்.ஏ.,க்களை தவெக வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தி, ஆளுங்கட்சியின் நிர்வாக மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதே திட்டம் என கூறப்படுகிறது.

இந்த வெற்றிகள் மூலம் சட்டமன்றத்தில் தவெக தனிப்பெரும்பான்மை பெறும் சூழல் உருவாகலாம். தற்போது ஆளும் கட்சியான தவெக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளின் அழுத்தம் மற்றும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமெனில், சட்டமன்றத்தில் தனித்து பெரும்பான்மை பலம் அவசியம் என்ற கணக்கில் முதலமைச்சர் விஜய் மாஸ்டர் பிளான் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, தலைமைச் செயலகத்திலேயே கட்சி இணைப்பு விழா நடைபெற்றது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அரசின் நிர்வாக மையமாக இருக்கும் தலைமைச் செயலகத்தில், ஆளும் கட்சியின் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றதுடன், புதிய உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. ‘தலைமைச் செயலகம் அரசின் அலுவலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா?’ என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், தவெக ‘குதிரை பேரம் நடத்தும் அரசியல்’ என்ற விமர்சனம் பேசப்பட்டு வந்த நிலையில் தவெக, தற்போது அதையே மிக திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

இதனிடையே, தவெக அரசு தனி பெரும்பான்மையுடன் அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்தும் வேண்டும் என்பதால் அதிமுகவிலிருந்து மேலும் 7 சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் இழுக்கும் முயற்சியில் தவெகவின் நிர்வாகியும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Secretariat ,Thaveka government ,AIADMK ,Chennai ,Thaveka ,Tamil Nadu ,
× RELATED அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால்...