×

மணலி புதுநகர் அருகே ஆயில் குடோனில் திடீர் தீ விபத்து: 2 தீயணைப்பு வீரர்கள் மயக்கம்

மாதவரம்: மணலி புதுநகர் அருகே விச்சுர் அருள் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஆயில் தேக்கி வைக்கப்பட்டு பின்னர் கேன்களில் அடைத்து விநியோகஸ்தர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை இந்த குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. உடனே குடோன் உள்ளே இருந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உள்ளே விரைவாக தீப்பற்றி எரியக்கூடிய ஆயில் கேன்கள் ஏராளமாக இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. மணலி, எண்ணூர், திருவொற்றியூர் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பிரத்யேக தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஏராளமான ஆயில் கேன்கள் இருந்ததால், தீயணைப்பதில் வீரர்கள் கடுமையாக போராடினர். தீயிலிருந்து வெளியேறிய புகை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியதால் சுற்றுவட்டாரத்தில் இருந்த தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகளில் இருந்த ஊழியர்கள், பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி எடுத்தும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கரும்புகையுடன் தீ மளமளவென பற்றி எரிவதால் அந்த பகுதியே கருமை நிறத்தில் காட்சி அளிக்கிறது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 வீரர்கள் கரும்புகையில் சிக்கி மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தனர். அவர்களை மற்ற வீரர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Manali Pudunagar ,Madhavaram ,Vichur Arul Nagar ,
× RELATED எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள்...