×

கர்நாடக மாநிலங்களவை தேர்தலில் மாஜி பிரதமர் தேவகவுடாவுக்கு மீண்டும் எம்பி பதவி கிடைக்குமா?: பாஜக முடிவெடுக்க கோரிக்கை

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்புவது குறித்து பாஜகவே முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பதவி உட்பட நான்கு மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல் வரும் ஜூன் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த நான்கு இடங்களில் மூன்றை காங்கிரஸ் கட்சியும், ஒன்றை பாஜகவும் எளிதாக வெல்ல முடியும்.

கர்நாடக சட்டப்பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சிக்கு போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால், தேவகவுடா மீண்டும் எம்பியாக பாஜகவின் ஆதரவை மட்டுமே நம்பியுள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, ‘பாஜகவிற்கு 63 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் கட்சியில் பல பிரச்னைகள் உள்ளன. இதைப் பற்றி நானோ அல்லது தேவகவுடாவோ ஏன் விவாதிக்க வேண்டும்? டெல்லியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதுவே இறுதியானது.

தேவகவுடாவுக்காக வேறு ஒருவரின் வாய்ப்பைப் பறிக்க வேண்டும் என்று நாங்கள் கூற முடியாது. எனவே அவர்களே இதுகுறித்து முடிவெடுக்கட்டும்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையில், கர்நாடக பாஜகவினர் இந்த ஒரு இடத்திற்கு முன்னாள் முதல்வர் டி.வி.சதானந்த கவுடாவை நிறுத்த விரும்புகின்றனர். மேலும், சமீபத்திய மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் அனைத்து இடங்களையும் இழந்த கல்யாண கர்நாடகா பகுதிக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதற்கிடையில், கன்னட தொலைக்காட்சி நடிகை ஜான்வி, ஜேடிஎஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி முன்னிலையில் அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

Tags : Majhi PM Devakawuda ,Karnataka ,BJP ,Bangalore ,Union Minister ,Kumarasamy ,Devagawuda ,H. D. ,Devakawuda ,
× RELATED 3 அதிமுக MLA-க்கள் ராஜினாமா… ஆதவ் முன்னிலையில் தவெக-வில் ஐக்கியம்