தடுப்பூசிகள் A to Z

நன்றி குங்குமம் டாக்டர்

தடுப்பூசி என்றாலே அது குழந்தைகளுக்கானது மட்டுமே என்ற பொதுவான கருத்து நம்மிடையே நிலவுகிறது. ஆனால், குழந்தைகளைப் போலவே பெரியவர்களுக்கும் பலவகையான தடுப்பூசிகள் இருக்கிறது. அதுபோன்று நாம் சில நாடுகளுக்கு பயணம் செல்லும்போது எடுத்துக் கொள்ள வேண்டிய தடுப்பூசிகள் சில இருக்கின்றன. அதுமட்டுமல்ல, நாம் செல்லமாக வளர்க்கும் பிராணிகளுக்கும் தடுப்பூசி இருக்கிறது என்கிறார் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமசுப்பிரமணியன். மேலும், தடுப்பூசிகளில் எத்தனை வகை இருக்கிறது. அதை யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம். எந்த பருவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற A- Z தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது?

தடுப்பூசி என்பது ஒரு உயிரியல் காரணியாகும். இது உடலில் செலுத்தப்படும்போது, ஒரு கிருமி தாக்கியதாக உடல் நினைத்துக்கொண்டு அதற்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை (Antibodies) உற்பத்தி செய்கிறது. இந்த ஆன்டிபாடிகள் உடலில் தங்கியிருந்து, எதிர்காலத்தில் உண்மையான கிருமித் தொற்று ஏற்படும்போது அதை எதிர்த்துப் போராடி நம்மைக் காப்பாற்றுகின்றன. தடுப்பூசிகள் 100% நோயைத் தடுக்காது என்றாலும், நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், மருத்துவமனையில் அனுமதிப்பதைத் தவிர்க்கவும், உயிரிழப்பிலிருந்து காக்கவும் உதவுகின்றன.

கர்ப்பிணிகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் தெரிந்து கொள்வோம்.

கர்ப்பகாலத்தில் தடுப்பூசி: தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பு

கர்ப்ப காலத்தில் தேவையற்ற மருந்துகளைத் தவிர்த்தாலும், சில தடுப்பூசிகள் தாய்க்கும் குழந்தைக்கும் மிகவும் அவசியமானவை.

Tdap தடுப்பூசி: கர்ப்பத்தின் மூன்றாவது பகுதியில் (6 மாதங்களுக்குப் பிறகு) டெட்டனஸ், டிப்தீரியா மற்றும் பர்டுசிஸ் ஆகியவற்றுக்கான தடுப்பூசி போடப்பட வேண்டும். இது தாயின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பிறக்கும் குழந்தையையும் பாதுகாக்கிறது.

ஃப்ளூ தடுப்பூசி: கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டால் அது நிமோனியா போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், ஃப்ளூ பரவலாக இருக்கும் காலங்களில் இந்த ஊசி அவசியமாகிறது.

குழந்தைகளை பொருத்தவரை முதல் தடுப்பூசி பிறந்த மூன்று நாட்களுக்குள் கொடுக்கப்படுகிறது. அதில் மூன்றுவிதமான தடுப்பு மருந்துகள் இருக்கும். முதலாவது, ஜீரோ போலியோ சொட்டு மருந்து. பிறந்தவுடனேயே கொடுக்கப்படுவதால் இதற்கு ஜீரோ என்று பெயர்.

அடுத்ததாக, ஹெபடைடிஸ் பி எனும் மஞ்சள் காமாலை தடுப்பு மருந்தாகும். மூன்றாவதாக பிசிஜி (BCG) தடுப்பூசி. இது காசநோய்க்கு எதிராக பாதுகாக்கிறது. அதன்பிறகு, ஆறாவது வாரத்தில் DPT என்ற அடுத்த தடுப்பூசி கொடுக்க வேண்டும். இது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய டிப்தீரியா, கக்குவான் இருமல் மற்றும் டெட்டனஸ் (வில்வாய்ஜன்னி) ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இதனுடன் சேர்த்து தற்போது, ஆறுவகையான நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுகிறது. இவை, 6-ஆவது வாரம், 10- ஆவது வாரம், 14-ஆவது வாரம் என்று பல பிரிவுகளாக பிரித்து கொடுக்கப்படுகிறது. அவை, டிபிடியுடன் மஞ்சள் காமாலைபி, HIB, போலியோ தடுப்பூசியும் கலந்து 6 நோய் தடுப்பு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. அடுத்து ஏழாவதாக, நிமோகோகல் கிருமியை அழிக்கும் தடுப்பூசி. இந்த தடுப்பூசி மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியாவை கட்டுப்படுத்த உதவுகிறது.

6 -ம் மாதம்

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் கிருமிகளுக்கு எதிரான தடுப்பூசி இது. இது 6-ம் மாதம் மற்றும் 7-ஆம் மாதம் கொடுக்கப்படுகிறது. அடுத்து டைபாய்டு நோய்க்கான தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இது ஆறு மாதத்தில் இருந்து 12 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

9 மாதங்களில்

அடுத்து முக்கியமானது MMR தடுப்பூசி. இது புட்டாலம்மை, தட்டம்மை, மற்றும் ரூபெல்லாவை தடுக்கிறது. இவை எல்லாம்தான் குழந்தைக்கு 1 வயதிற்குள் போடக் கூடிய தடுப்பூசிகள். அடுத்து 2-ஆவது வருடத்தில் போடக் கூடியவை இருக்கின்றது.

12 மாதங்களில்

ஹெபடைடிஸ் A தடுப்பூசி. இது இரண்டுமுறை கொடுக்க வேண்டும். 12-ம் மாதம் கொடுத்த பிறகு அடுத்த ஆறு மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும்.

15 -ஆவது மாதம்

இதில் இரண்டு தடுப்பூசிகள் கலந்து கொடுக்க வேண்டும். இதில் மீண்டும் MMR தடுப்பூசி மற்றும் சிக்கன்பாக்ஸ் எனும் முத்து அம்மைக்கு எதிராக கொடுக்கப்படுகிறது.

18-ம் மாதம்

இந்த பருவத்தில் மேலே சொன்ன டிபிடி மற்றும் ஆறு வகையான தடுப்பூசிகளில் ஹெபடைடிஸ் தவிர, மீதமுள்ள 5 தடுப்பூசிகள் போடப்படும் .

இது தவிர, இன்னும் இரண்டு முக்கியமான தடுப்பூசிகள் இருக்கிறது. அவை ஜப்பான் பி மூளைக்காய்ச்சல் தடுப்பூசி (Japanese Encephalitis Virus Vaccine). இது 1 வயதுக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், 1 மாத இடைவெளியில் இரண்டுமுறை கொடுக்க வேண்டும். இவையெல்லாம் 2 வயது வரை உடையது.

பெரியவர்களுக்கு தடுப்பூசி

பெரியவர்களுக்குத் தடுப்பூசி தேவைப்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன:

1. குறையும் எதிர்ப்பு சக்தி: சிறுவயதில் போடப்பட்ட தடுப்பூசிகளின் வீரியம் 30, 40 அல்லது 50 வயதாகும்போது குறைந்துவிடும். மொபைல் போனுக்கு அவ்வப்போது சார்ஜ் செய்வது போலவும், வளர வளர சட்டையின் அளவு மாறுவது போலவும், நம் உடலின் எதிர்ப்புச் சக்தியைத் தக்கவைக்க ‘பூஸ்டர்’ (Booster) ஊசிகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, டெட்டனஸ் தடுப்பூசியை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை போட்டுக்கொள்ள வேண்டும்.

2. புதிய நோய்த் தேவைகள்: சில நோய்கள் பெரியவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் (Cervical Cancer) தவிர்க்க உதவும் வேக்சினை 15 வயதுக்கு மேல் பெண்கள் எடுத்துக்கொள்வது அவசியம்.

3. உருமாறும் கிருமிகள்: ‘ஃப்ளூ’ (Flu) போன்ற வைரஸ்கள் ஒவ்வோர் ஆண்டும் உருமாற்றம் (Mutation) அடைகின்றன. எனவே, இந்த ஆண்டு போட்ட ஊசி அடுத்த ஆண்டு வேலை செய்யாது. அதற்கேற்ப புதிய தடுப்பூசிகளை ஆண்டுதோறும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆரோக்கியத்தின் மீதான காப்பீடு

உடல்நிலை சரியில்லாதபோது நாம் மருத்துவர் கொடுக்கும் ஊசிகளைத் தயக்கமின்றிப் போட்டுக் கொள்கிறோம்.ஆனால், ஆரோக்கியமாக இருக்கும்போது நோய் வராமல் தடுக்க ஊசி போடத் தயங்குகிறோம். இது ஒரு புதிய வாகனத்திற்கு எடுக்கும் காப்பீடு (Insurance) போன்றது. விபத்து நடக்கும் வரை இன்சூரன்ஸின் மதிப்பு தெரிவதில்லை; அதுபோலவே நோய் பாதிப்பு ஏற்படும் வரை தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்கள் உணருவதில்லை.

தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள வயது ஒரு தடையல்ல; 90 வயது வரை தாராளமாகப் போட்டுக்கொள்ளலாம். ஒருவருக்கு எந்த வகையான தடுப்பூசி தேவை என்பதை பின்வரும் காரணிகள் தீர்மானிக்கின்றன:

வாழ்க்கை முறை மற்றும் பழக்கங்கள்: புகைப்பிடித்தல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் உள்ளவர்களுக்கு நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்கள் தடுப்பூசி எடுக்க வேண்டும்.

பணி மற்றும் ஆர்வம்: விலங்குகளுடன் நெருங்கிப் பழகுபவர்கள் அல்லது குறிப்பிட்ட பணிகளில் இருப்பவர்கள் அதற்கேற்ப தடுப்பூசி எடுக்க வேண்டும்.

இணை நோய்கள் (Comorbidities): சர்க்கரை நோய், இதயப் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சனை அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாகக்கூடும். எனவே இவர்கள் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பூசி போடுவது பாதுகாப்பானது.

சில நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது அங்குள்ள நோய்த் தொற்றுக்கு ஏற்ப தடுப்பூசி தேவைப்படலாம். சிறுவயதில் விடுபட்ட தடுப்பூசிகளைப் பெரியவர்கள் ‘கேட்ச் அப்’ (Catch up) வேக்சினாக எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளவர்கள் ‘லைவ் வேக்சின்’ (Live vaccines) எடுக்கும்போது மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

புற்றுநோயைத் தடுப்பதில் தடுப்பூசிகளின் பங்கு

புற்றுநோய் என்பது செல்கள் அப்நார்மலாக வளர்வதாகும். சில புற்றுநோய்கள் கிருமித் தொற்றுகளால் ஏற்படுகின்றன, அதைத் தடுப்பூசி மூலம் தவிர்க்கலாம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer): இது ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க HPV தடுப்பூசி போடப்படுகிறது. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு டோஸ்களும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று டோஸ்களும் (0, 2, 6 மாதங்கள்) பரிந்துரைக்கப்படுகிறது.

கல்லீரல் புற்றுநோய்: இது ஹெப்படைடிஸ் பி வைரஸால் ஏற்படலாம். இதற்கான தடுப்பூசி (0, 1, 6 மாதங்கள்) தற்போது குழந்தைகளுக்குப் பிறந்த உடனே போடப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால், தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும் தடுப்பூசிகள் உதவுகின்றன.

வெளிநாடு பயணம் செல்பவர்களுக்கான தடுப்பூசிகள்

பயணங்களின் போது நாம் செல்லும் இடத்தைப் பொறுத்து தடுப்பூசிகள் மாறுபடும். குறுகிய கால பிசினஸ் பயணங்களுக்குப் பெரிய அளவில் தடுப்பூசிகள் தேவைப்படாவிட்டாலும், கூட்டமான இடங்களுக்குச் செல்லும் போது ஃப்ளூ (Flu) ஊசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.

ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா: சில நாடுகளுக்குச் செல்ல எல்லோ ஃபீவர் (Yellow fever) தடுப்பூசி கட்டாயம்; இது இருந்தால் தான் விசாவே கிடைக்கும்.

தாய்லாந்து: இங்கு செல்பவர்களுக்கு ஹெப்படைடிஸ் ஏ மற்றும் டைபாய்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

ஹஜ் பயணம்: புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மெனிகோ காக்கல் (Meningococcal) தடுப்பூசி போடுவது கட்டாயமாகும்.

செல்லப்பிராணிகளும் ரேபிஸ் தடுப்பூசியின் அவசியமும்

செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, பூனை அல்லது நாய்களுக்கு வருடா வருடம் ரேபிஸ் வராமல் இருக்க ஊசி போடுவது அவசியம். தடுப்பூசி போட்டால் கூட 100% பாதுகாப்பு என்று சொல்ல முடியாது; ஒருவேளை தடுப்பூசி போட்ட நாயை, ரேபிஸ் உள்ள மற்றொரு நாய் கடித்தால், ஒரு 5% நோய் வர வாய்ப்புள்ளது.

தெருவில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பவர்கள் அல்லது விலங்குகளுடன் அதிக தொடர்பு கொண்டவர்கள் (உதாரணமாக ப்ளூ கிராஸ் ஊழியர்கள்) தற்காப்புக்காக ‘ப்ரீ எக்ஸ்போசர்’ (Pre-exposure) தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. இதற்கு 0 மற்றும் 7-வது நாட்களில் என இரண்டு ஊசிகள் போட்டால் போதுமானது. ஒருவேளை விலங்கு கடித்த பிறகு போடப்படும் ‘போஸ்ட் எக்ஸ்போசர்’ (Post-exposure) சிகிச்சையில், இந்தியாவில் பொதுவாக 0, 3, 7, 14 மற்றும் 28 ஆகிய நாட்களில் ஐந்து ஊசிகள் வரை போட பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு முறை

தடுப்பூசிகள் மிகவும் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகே பயன்பாட்டிற்கு வருகின்றன. முதலில் விலங்குகளிடம் சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு மனிதர்களிடம் மூன்று நிலைகளில் (Phase 1, 2, 3) சோதனை செய்யப்படுகின்றன. தடுப்பூசிகள் மருந்து மாத்திரைகளை விடப் பாதுகாப்பானவை, ஏனெனில் அவை ஆரோக்கியமான மக்களுக்கு வழங்கப்படுவதால் அதன் பாதுகாப்புத் தரங்கள் மிக அதிகமாக இருக்கும்.

இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் உலகில் ஒரு முக்கிய நாடாகத் திகழ்கிறது. கோவிட் காலத்தில் இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்குத் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கோவிட் தடுப்பூசி அவசர நிலை காரணமாகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டாலும், அது ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. சிலருக்குச் சிறிய பக்கவிளைவுகள் (அலர்ஜி போன்றவை) ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அதனால் கிடைத்த நன்மைகள் மிக அதிகம்.

தற்போது பெருகிவரும் ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் (மருந்துகளுக்குக் கட்டுப்படாத கிருமிகள்) காலத்தில், நோய்கள் வராமல் தடுப்பூசி மூலம் தடுப்பதே ஆரோக்கியமாக வாழ்வதற்கான சிறந்த வழியாகும் எனவே, நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. இது ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை உறுதி செய்ய உதவும் ஒரு எளிய வழியாகும்.

தொகுப்பு – ஸ்ரீ தேவி குமரேசன்

Related Stories: