ஆட்டிசம் பெற்றோரின் பங்கு!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆட்டிசம் தற்போது நாம் அதிகம் கேள்விப்படக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. ஆனால், ஆட்டிசம் என்றால் என்ன.. என்பது பற்றி முழுமையான புரிதல் இன்னும் மக்களிடையே ஏற்படவில்லை. எனவே, ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 அன்று ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டு ஆட்டிசம் மனித நேயமும் ஒவ்வொரு உயிருக்கும் மதிப்பு உண்டு என்ற கருப்பொருளின் கீழ் ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி. மேலும், ஆட்டிசம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை.

ஆட்டிசம் என்பது குழந்தையின் சமூகத் தொடர்புத் திறன் பாதிப்பு, பேசும் திறன் பாதிப்பு, ஒரு செயலை திரும்பத் திரும்பச் செய்தல் மற்றும் உணர்ச்சி அறிதலில் மாற்றம் போன்ற அறிகுறிகள் அடங்கியது. ஆட்டிசம் முன்பெல்லாம் நூறில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு என்ற நிலையிலிருந்து தற்போது 35 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பாதிப்பு என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. ஆட்டிசம் பாதிப்பு ஏற்படுவதற்கு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளே காரணமாகும்.

ஆட்டிசம் பாதிப்பு அதிகமாவதை, தடுப்பதற்கு பெற்றோர், குடும்பத்தினர் இடையே ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு தேவை. ஆட்டிசத்தின் ஆரம்பநிலை அறிகுறிகள் என்ன.. அதை எவ்வாறு கண்டறிவது போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம்.

ஆட்டிசத்தின் அறிகுறிகள்:

பிறந்தது முதல் -6 மாதங்கள் வரை:

*முகம் பார்த்து சிரிக்காமல் இருப்பது

*கண்களை பார்க்காமல் இருப்பது

*மனித முகங்களை உற்று நோக்காமல் இருப்பது

6 மாதம் முதல் 1 வயது வரை

* பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பாமல் இருப்பது.

* மனிதர்களின் முகம் மற்றும் கண்களை பார்க்காமல் இருப்பது.

* மா, பா, தா, போன்ற மழலைச் சொற்கள் பேசாமல் இருப்பது.

* மற்றவர்கள் செய்வதை பார்த்து அந்த செயலை திரும்பச் செய்யாமல் இருப்பது.

ஒரு வயது முதல் ஒன்றரை வயது வரை

* அம்மா, அப்பா அத்தை போன்ற ஒற்றைச் சொற்கள் பேசாமல் இருப்பது.

* தனக்கு பிடித்தவற்றை சுட்டிக்காட்ட தெரியாமல் இருப்பது.

* பெற்றோர் சொல்லும் சிறிய வார்த்தைகளைப் புரிந்து செயல்படுத்தாமல் இருப்பது.

* சைகைகள் செய்யவும் புரிந்து கொள்ளவும் தெரியாமல் இருப்பது

* மற்ற குழந்தைகளுடன் சேராமல் தனியாக விளையாட மட்டும் விரும்புவது

* சில சமயங்களில் இதுநாள் வரை பேசிக் கொண்டிருக்கும் குழந்தை அதற்கு மேல் பேசும் திறனில் முன்னேற்றம் இல்லாமல் பின்னடைவது.

ஒன்றரை வயது முதல் இரண்டு வயது வரை:

* இரண்டு வார்த்தைகள் சேர்த்து பேசாமல் இருப்பது (உ.தா. அம்மா வா, தண்ணீர் வேண்டும்)

* கற்பனை விளையாட்டுகள் விளையாடாமல் இருப்பது.

* தனக்கு பிடித்தவற்றை சுட்டிக்காட்டி பெற்றோருடன் சேர்த்து அதைப்பற்றி மகிழாமல் இருப்பது.

* கைகளை தட்டுவது, சுற்றுவது குதிப்பது போன்ற செயல்களை திரும்பத் திரும்பச் செய்வது

* உணர்ச்சி திறன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது.

மூன்று முதல் ஐந்து வயது வரை

* மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் தனியே இருப்பது.

* மற்றவர்களுடன் பேசும் திறன் குறைவாக இருப்பது.

* ஒரே செயலை திரும்பத் திரும்பச் செய்வது அதிகமாகக் காணப்படும்.

* ஒரே பொருளை மட்டும் வைத்து விளையாடுவது.

* உணர்ச்சித்திறன் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பது.

* ஒரு சில குறிப்பிட்ட உணவை மட்டும் உண்பது.

* பெற்றோர் குழந்தையின் நடவடிக்கையில் இதுபோன்ற மாறுதல்களை அடையாளம் கண்டு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும்.

* வேலைப்பளுவும், சமூக ஊடகங்களும் பெற்றோர் குழந்தையுடன் செலவிடும் நேரத்தை பாதிக்கிறது. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பும் தற்கால சூழ்நிலையில். குறைந்துவிட்டது. இவை யாவும் பிறந்த குழந்தைக்கு மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை குறைத்துவிடுகிறது. பெற்றோருக்கும் குழந்தையின் முதல் 2 வயதிற்குள் ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அறிய முடிவதில்லை.

* சிறிய குழந்தை தானே வளர வளர சரியாகிவிடும். என்று எண்ணி குழந்தைக்கு பாதிப்பு இருப்பதை அறிந்து கொள்ள தாமதம் ஆகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள குழந்தையின் வயதுகேற்ற அறிகுறிகள் இருந்தால் பெற்றோர் அதில் கவனம் செலுத்தி தகுந்த பயிற்சி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் மூன்று வருடத்தில் 80 சதவீதம் வளர்ச்சி ஆகும்.இதனால், ஆரம்ப நிலையில் மிகச் சிறிய வயதிலேயே அறிகுறிகளை அறிந்து பயிற்சி அளிக்கும்போது, குழந்தை இயல்பு நிலைக்கு மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

காலதாமதம் செய்யும் ஒவ்வொருநாளும் ஆட்டிசம் பாதிப்பில் இருந்து குணப்படுத்துவதில் அதிக சிரமமும், முழுமையாக குணப்படுத்த இயலாமலும் போக அதிக வாய்ப்பு உள்ளது. பெற்றோர் குழந்தைக்கு ஆட்டிசம் போன்ற பாதிப்பு வராமல் தடுக்க, அவர்களுடன் அதிகநேரம் பேசுவது, விளையாடுவது, கொஞ்சுவது, கதை சொல்வது, பாடல்கள் பாடுவது, வெளியே அழைத்துச் செல்வது, மற்ற குழந்தைகளுடன் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது போன்ற செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ஐந்து வயது வரை கைப்பேசி, தொலைக்காட்சி ஆகியவற்றை பார்க்க அனுமதிக்கக்கூடாது. சமூகத்தில் அனைவரும் ஆட்டிசம் பாதிப்பை, தடுக்கவும், ஆரம்ப நிலையிலேயே அறிந்து குணப்படுத்தவும் மருத்துவர்களுக்கு உறுதுணையாக செயல்பட வேண்டும்.

தொகுப்பு: குழந்தைகள் நல மருத்துவர் அமுதாதேவி

Related Stories: