மதுரை: மதுரை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த நெல் மூட்டை லாரியை விடுவிக்க வேளாண் விற்பனை குழு துறை அதிகாரிகள், லஞ்சம் கேட்டு பேரம் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வேளாண் விற்பனை குழு இளநிலை உதவியாளர் சரிகா மற்றும் வினோத் பாண்டி ஆகியோர், மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி பகுதியில் சில நாட்களுக்கு முன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மினி லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.
அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் இருப்பதால், அபராதம் விதிக்காமல் விடுவிக்க லஞ்சம் தர வேண்டுமென வேளாண் விற்பனை குழுவினர் பேரம் பேசியுள்ளனர். இதை அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், பெண் அலுவலர், மினி லாரி டிரைவரிடம், ‘‘ரூ.3,500 சொன்னோம். இப்ப ரூ.500 கம்மி பண்ணியாச்சு… இன்னும் குறைக்க சொல்றீங்களா’’ என பேசும் காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளது. அபராதம் விதிக்காமல் கடைகளில் பேரம் பேசுவது போல அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டு பேரம் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, இதே குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் வேறொரு பெயருக்கு ஜிபே மூலம் ரூ.2,500 பணம் வாங்கிய வீடியோவும் வெளியாகி பரபரப்ைப ஏற்படுத்தியிருந்தது. அரசு அலுவலர்கள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் தொடர்ந்து லஞ்சம் கேட்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
