ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் நள்ளிரவில் கருப்பு துணியால் மூடிய பானை உடைக்கப்பட்டு முட்டை மந்திரம் செய்யப்பட்டிருந்தது அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை திகிலடைய செய்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக நுழைவாயில் எதிரே காவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அலுவலக நுழைவாயிலில் கருப்பு துணியால் மூடப்பட்டு சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டிருந்த பானை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த குங்குமம் கலந்த ரத்த நிறத்தில் தண்ணீர் தரையில் கொட்டியிருந்தது. அதோடு கருப்பு மையால் உருவம் வரையப்பட்டிருந்த 4 முட்டைகள் இருந்தது.
அதேபோல் ஒரு எலுமிச்சம் பழம் இரண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் யாருக்கோ சூனியம் வைப்பதற்காக நள்ளிரவு முட்டை மந்திரம் போட்டு மாந்திரீக பூஜை செய்திருப்பதாக அவ்வழியாக சென்ற மக்கள் பீதியுடன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக பாதுகாப்பு பணி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி அவற்றை அப்புறப்படுத்தினர். மேலும் மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள் இதுபற்றி அறிந்து திகிலடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
