அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையானது; வேலுமணி அணிக்கு அமைச்சர் பதவி வழங்க ஆளுநர் மறுப்பு: விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பால் பரபரப்பு

சென்னை: கட்சித் தாவல் புகார் எதிரொலியாக வேலுமணி அணிக்கு அமைச்சர் பதவி வழங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ், தவெக வினர் அமைச்சரவை விரிவாக்கத்தில் சேர்க்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விசிக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் விஜய் தலைமையில் மைனாரிட்டி அரசு பதவி ஏற்றுள்ளது. தற்போது விஜயுடன் சேர்த்து 10 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும், வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களில் 12 பேர் அமைச்சர் பதவி எதிர்பார்த்தனர். ஆனால், 7 பேருக்கு அமைச்சர் பதவி தர விஜய் சம்மதித்திருந்தார். ஆனால் அவர்கள் 25 பேரையும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை பறிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ஆளுநர் அர்லேகரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளாவில் இருந்து இன்று சென்னை வருவார் என்று கூறப்படுகிறது. தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். தற்போது விஜய் உள்ளிட்ட 10 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இன்னும் 24 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்றாலும், அமைச்சரவை விரிவாக்கத்தின்போது 20 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது.

காரணம், தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு அணியினர் 25 பேரில் 7 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க எடப்பாடி அணியினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதுகுறித்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒரு நல்ல பதிலை தெரிவிக்காவிட்டால், நீதிமன்றம் செல்ல எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், ஆளுநர் அர்லேகரும் அதிமுக தரப்பு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோன்று, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் விஜய் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதால், அவர்களும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் மட்டுமே பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் வேலுமணியின் ஆதரவாளர்கள் அமைச்சரவையில் சேர ஆளுநர் மறுத்துவிட்டதால், தற்போது விசிகவை கூட்டணியில் இணைக்க முயற்சிப்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் அமைச்சர் கனவுடன் இருந்த வேலுமணி ஆதரவாளர்கள் தற்போது அதிருப்தி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே கட்சியில் இருந்த மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. தற்போது எம்எல்ஏ பதவியும் பறிபோனால், அமமுகவில் சேர்ந்த 18 பேரின் நிலைதான் நமக்கும் ஏற்படும் என்று வேலுமணி அணியினர் அச்சம் அடைந்துள்ளனர். அதில் ஒரு சில எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி அணிக்கு தாவ தூதுவிட்டு வருகின்றனர். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள அயோத்திதாசர் பண்டிதரின் 181வது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது மணி மண்டபத்திற்கு சென்று முதல்வர் விஜய் இன்று காலை 10 மணிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிருபர்களிடம் கூறியதாவது:
அமைச்சரவை விரிவாக்கம் கூடிய விரைவில் அறிவிக்கப்படும். காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் என எல்லோரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். உடனடியாக கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். நல்ல செய்தி வரும் என நினைக்கிறோம். அன்பான குடும்பம்போல அமைச்சரவை இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் விரும்புகிறார். வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ள இடதுசாரிகளின் கொள்கை முடிவுகளை நாங்கள் மதிப்போம். சமூகநீதி அடிப்படையில் இயங்கும் தலைவர்கள், கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும்.

மக்களின் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி செயல்பட நினைத்ததால் அதிமுகவின் ஒரு தரப்பினர் எங்களுக்கு ஆதரவு தந்தனர். எம்எல்ஏக்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்கள் உரிமை; அவர்களை சி.வி.சண்முகம் வழிநடத்துவார். சட்ட சிக்கல் வந்தால் சி.வி.சண்முகம் சந்திப்பார். அதிமுக நன்றாக இருக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவை நாங்கள் தோழமையுடன் தான் பார்க்கிறோம். தேர்தலில் தோல்வியை தழுவிய பிறகு நல்ல எதிர்க்கட்சியாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருக்க வேண்டும். பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி நினைத்தார். பாஜகவுடன் அதிமுக சேர்ந்தது மிகப்பெரிய அதிருப்தி என அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அணி இடம்பெறுமா? என்ற கேள்விக்கு ‘யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அமைச்சர் பதவிக்காக அவர்கள் எங்களிடம் வரவில்லை’ என கூறினார். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக வேலுமணி யின் ஆசை வார்த்தைகளை நம்பி அமைச்சர் பதவி ஆசையில் அவருடன் சென்ற 25 எம்எல்ஏக்களின் பதவிகளும் பறிக்கப்படும் நிலை தற்போது உருவாகியுள்ளதாக எம்எல்ஏக்கள் புலம்புகின்றனர்.

 

 

 

Related Stories: