×

பெருந்திட்ட வரைவு திட்டத்தின் கீழ் பழநியில் 15 கடைகள் இடித்து அகற்றம்: கோயில் நிர்வாகம் நடவடிக்கை

பழநி: பழநியில் பெருந்திட்ட வரைவு திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த 15 கடைகள் கோயில் நிர்வாகம் சார்பில் இன்று அகற்றப்பட்டன.

தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி கோயில். இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரோப்கார் நிலையம் அருகிலுள்ள 58 ஏக்கர் நிலத்தை பெருந்திட்ட வரைவு திட்டத்தின் கீழ் கையகப்படுத்தி பல்வேறு பணிகளை மேற்கொள்ள கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இந்த இடம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என போர்டு வைக்கப்பட்டது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. ஆனால், இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கூறி நிலத்தின் உரிமையாளர்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கையகப்படுத்தப்பட்ட இடத்திலுள்ள கடைகள், தகர ஷெட்டுகளை தாமாகவே முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள் கடைகளை அகற்றி கொள்ள முன்வரவில்லை.

இந்நிலையில், இன்று காலை கையகப்படுத்த இடங்களில் இருந்த கடை, தகர ஷெட்டுகளை அகற்ற ஜேசிபி, பொக்லைன் இயந்திரத்துடன் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்டேஷ் தலைமையில் பணியாளர்கள் வந்தனர். இதையறிந்து, அங்கு திரண்ட நிலத்தின் உரிமையாளர்கள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோயில் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றுவதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து களைந்து சென்றனர். இதையடுத்து, 15க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : PALANI ,Palani Dandayudapani Temple ,Tamil Nadu ,Echoil ,
× RELATED உக்ரைன் ஏவிய விமானத் தாக்குதலில் ரஷ்யாவில் ஒடிசா தொழிலாளி பலி