×

பழவேற்காடு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள் வெடிகுண்டா..? போலீசார் கைப்பற்றி விசாரணை

பொன்னேரி: பழவேற்காடு கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம பொருள் வெடிகுண்டாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதை, போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு ஏரியிலும், கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல பசியாவரத்தை சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர், தனது படகில் 4 பேருடன் கடலில் மீன்பிடிக்க சென்றார். கடலின் சிறிது தூரத்தில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட இரும்பிலான துருப்பிடித்த நிலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியது. அதை பார்த்ததும் மீனவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே திருப்பாலைவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு கடற்கரைக்கு மீனவர்கள் திரும்பினர். பின்னர், கரைக்கு கொண்டு வரப்பட்ட மர்ம பொருளை போலீசார் மீட்டனர். பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அந்த மர்ம பொருளை சோதனை நடத்தி காவல் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒத்திகை பயிற்சியில் பயன்படுத்திய வெடிகுண்டா அல்லது ராக்கெட் லாஞ்சர் போன்ற வெடிபொருளா, கப்பற்படை கப்பலில் இருந்து தவறி விழுந்ததா அல்லது நாச வேலைக்கு பயன்படுத்த வைத்திருந்த வெடிகுண்டா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.

Tags : BONNERI ,30 ,Old Town ,
× RELATED தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி...