×

ஓட்டுனர் மகனை கொறடாவாக்கியது தவெக ஓட்டுனரையே முதல்வராக்கி மகிழ்ந்த கட்சி திமுக: கவிஞர் காசிமுத்துமாணிக்கம் பதிலடி

சென்னை: ஓட்டுனரையே முதல்வராக்கி மகிழ்ந்த கட்சி திமுக என்று தவெகவிற்கு காசிமுத்துமாணிக்கம் பதிலடி கொடுத்துள்ளார். திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: டிரைவர் மகனை கொறடாவாக்கினவர் விஜய் என்கிறீர்கள், மகிழ்ச்சி. அதற்காக திமுக ஏன் டிரைவரை எம்.எல்.ஏ. ஆக்கவில்லை என கேட்பது தவறு. நீங்கள் ஓட்டுனர் மகனை கொறடாவாக்கினீர்கள். நாங்கள் ஓட்டுனரையே முதல்வராக்கினோம். கலைஞர் தனது ஓட்டுநரை (ஆர்.வி.ஜானகிராமனை) புதுச்சேரியின் முதல்வராக்கினாரே.

நீங்கள் ஏன் முதல்வராக்கவில்லை. யாரும் யாரையும் பார்த்து கேட்டதில்லை. அது உயர்த்தியவர்களை பணயம் வைத்து, பந்தயம் கட்டி அவர்ளை அசிங்கப்படுத்துவதுபோல. நாங்கள் கூடத்தான் கும்பகோணம் மேயராக ஆட்டோ ஓட்டுனர் சரவணனை காங்கிரஸ் சார்பில் நின்ற ஆட்டோக்காரரை மேயராக உயர்த்தினோம். ராமநாதபுரம் மன்னரை- காங்கிரஸ் வேட்பாளரை அவர் வீட்டு வாசலில் குதிரை வண்டி ஓட்டியவரை நிறுத்தி தோற்கடித்தது திமுக. குதிரை வண்டி ஓட்டுனரை நீங்கள் ஏன் சட்டமன்ற உறுப்பினராக்கவில்லை என யாரும் யாரையும் கேட்கவில்லை.

திமுக ஏன் பொதுத்தொகுதியில் தலித்தை நிறுத்தவில்லை என்கிறார் ஆதவ். தலித்துகளை பொது தொகுதியில் நிறுத்துவதை ஆரம்பித்து வைத்ததே திமுகதான். கோவை தண்டாயுதபாணியை பொது தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தது திமுக. ஜோசப் சாமுவேல், எபிநேசர் போன தேர்தலிலும், இந்த முறை திமுக கூட்டணியில் மேலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் வென்றதும், விசிகவின் பன்னீர்தாஸ் திருப்போரூரில் நின்றதும் ஆதவுக்கு தெரியாதா? திருச்சியில் தலித் எழில்மலை, பொது தொகுதியில் நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரை வெற்றி கண்டார்.

திராவிட இயக்கமான அதிமுகதான், திராவிட வழிதான் இந்த வெற்றியை பெற்றுத்தந்தது. வீம்புக்காக பேசக்கூடாது. 2006-ல் 74 சதவீதம் கலைஞர் முதல்வர் ஆகக்கூடாது என வாக்களித்தார்கள் என பொய் கூறும் ஆதவே, 2006-ல் 165 இடத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் முதல்வராக்குவதற்கு வாக்கு போட்டவர்கள் தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. உங்களைப்போல், உங்களை எதிர்த்து வாக்கு வாங்கி வென்றவர்களிடம் போய் கெஞ்சி, கூத்தாடி ஆதரவு கேட்கவில்லை.

எவ்வளவு உயரத்தை விட்டுவந்தேன் எனக்கூறி, இவ்வளவு உயரம் இறங்கி கெஞ்சுகிறீர்களே. இன்று போய் நாளை வா என ராமன் போட்ட பிச்சையில் ஒருநாள் ராவணன் வாழ்ந்தது போல தி.மு.க. கூட்டணி போட்ட பிச்சையில் அரசமைத்துள்ளீர்கள். 1991ல் இரண்டு இடத்தில் வென்ற தி.மு.க.தான் 1996, 2006, 2021ல் வென்று ஆட்சியை பிடித்தது.  1996ல் 4 சீட் மட்டும் வென்ற ஜெயலலிதா 2001, 2011, 2016 என வெற்றிப்படிகளை சுவைக்கவில்லையா.

எய்ட்ஸ் வந்த கட்சிகளே எழுந்து விட்டனர். இருமல் வந்த நாங்களா எழுந்து நிற்கமாட்டோம். அண்ணா தோற்றவுடன் தி.மு.க. அழிந்தது என யாரும் கூறியது இல்லை. ஜெயலலிதா தோற்றவுடன் அ.தி.மு.க. அழிந்துவிடும் என கூறவில்லை. தளபதி தோற்றதால், தி.மு.க.வே அழிந்ததாக பேசுவதா? திமுக பீனிக்ஸ் பறவைபோல. எரிந்தாலும் மீண்டு வரும். பீனிக்ஸ்போல. விழுவதும், எழுவதும் கடல் அலைக்கும், கதிரவனுக்கும் பழக்கம்.

கடலில் அலை முதலில் விழும், பின் எழும். அதுபோல சூரியன் மறைவான். தன்னை புதுப்பித்துக்கொண்டு மீண்டும் காலையில் எழுவான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே ஒருநாள் மீண்டும் வெல்லும். அந்த நாள் அரியணையில் தி.மு.க. அமரும் நாள், விரைவில் -மிக விரைவில். கொளத்தூரில் தமிழக வெற்றி கழக வட்டசெயலாளர் சிறுமியை சீரழிக்கிறார். கட்சி நீக்கம் இல்லை. தேசத்தை காத்து வந்த தமிழ்நாட்டின் இரண்டு ராணுவ வீரர்கள் அநியாயத்துக்கு கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ராணுவத்தில் காஷ்மீரில் பணிபுரிந்து வந்த மகேஷ்குமார் தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரியை அடுத்த பூவந்தி அருகே குத்தப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார். இது தான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? மகேஷ்குமாருக்கு முன்பே ராணுவத்தில் பணிபுரிந்த மகேஷ்குமாரின் தந்தை செல்லப்பனும் கொல்லப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்கவிட்டு, எந்த கட்சியை முழுசும் இழுக்கலாம், எந்த கட்சியை பகுதி பகுதியாக பிரிக்கலாம் என முதல்வர் விஜய் சிந்திக்கிறார் போலும். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Kashimutumanickam ,Chennai ,Taweka ,Dimuka Merchant Team ,Kavinghar Kashimutumanickam ,Vijay ,
× RELATED ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்