சென்னை: தமிழகத்தில் தற்போது வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் நுகர்வு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கணக்கெடுத்த நாளில் இருந்து சரியாக 20 நாட்களுக்குள் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்பது விதியாகும். தவறும்பட்சத்தில் எவ்வித அறிவிப்புமின்றி மின் விநியோகம் உடனடியாகத் துண்டிக்கப்படும். அதன்பின்னர், நுகர்வோர்கள் மின் வாரியத்திற்கு அபராதத் தொகையைச் செலுத்திய பிறகே மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.
இந்தச் சூழலில், பலர் வேலைப்பளு, மறதி காரணமாகக் குறிப்பிட்ட நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நீண்டகாலப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ‘தானியங்கி மின் கட்டணச் செலுத்தும் முறை’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை பெற விரும்பும் நுகர்வோர்கள், மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tangedco.gov.in பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள ‘பேமெண்ட்’ பிரிவில் இ.பி. ஆட்டோ பே என்ற புதிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
இதன் பின்னர், தங்களது மின் இணைப்பு எண்ணை பதிவு செய்து விவரங்களை சரிபார்த்தபின், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அதன் தொடர்ச்சியாக தங்களது வங்கி கணக்கு எண் மற்றும் வங்கி விவரங்களைப் பதிவு செய்து இந்த வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
இதன் மூலம், இனிவரும் காலங்களில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்ட நாளில் இருந்து 10வது நாளில், நுகர்வோரின் மின் கட்டணத் தொகை அவர்களது வங்கி கணக்கிலிருந்து தானாகவே எடுத்துக்கொள்ளப்படும். வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்தப் பிரிவில் உள்ள அனைத்து மின் நுகர்வோரும் இந்த எளிய நவீன வசதியைப் பயன்படுத்திப் பலன் பெறலாம் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
