சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாள் வேலை, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு மாதம் 10 நாள்களுக்கு பதிலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும். பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள்.
புதிய அரசின் வாயிலாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று அவர்கள் நம்பும் வேளையில், அந்த நம்பிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையினரின் சேவை புறக்கணிக்க முடியாதது. ஆனால், அவர்களின் நலன்கள் மட்டும் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. அவர்களின் ஊதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணையிட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஆட்சிகள் மாறினாலும் அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற நிலை மட்டும் மாறவில்லை என்பது தான் வேதனையான உண்மை.
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் கிட்டத்தட்ட காவல்துறையினருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் பங்கு இருக்கிறது. திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு உதவியாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர் ஆவர்.
பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் காலியிடங்கள், பெருகி வரும் காவல்பணி தேவைகள் ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்போது ஊர்க்காவல் படையின் சேவை ஒவ்வொரு நாளும் தேவை. இது காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை.
இவை அனைத்திற்கும் மேலாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழகத்தில் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான புதிய முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கும் ஊர்க்காவல் படையினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையிலும் ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
