×

திரைப்படத்துறைக்கு ராஜ்மோகன் அமைச்சரா? நடிகர் விஷால் ஆதங்கம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முதற்கட்ட அமைச்சரவை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி, சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற ராஜ்மோகன் பள்ளி கல்வி, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதுகுறித்து நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்து, திரைப்படத்துறை தொடர்பான சில கோரிக்கைகளை முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.

அது வருமாறு: முதல்வர் ஜோசப் விஜய், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை இலாகா ஒதுக்கியதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ராஜ்மோகன் திரைப்பட தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவு சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. உண்மையில் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நமது திரைப்படத்துறையின் கோரிக்கைகளையும், குறைகளையும், குறிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது.

இன்று கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நமது திரைப்படத்துறையின் கோரிக்கைகளையோ, குறைகளையோ அல்லது செய்யப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்த விண்ணப்பங்களையோ, ஒரு அமைப்பாகவோ அல்லது சங்கமாகவோ இத்துறையில் மிகக்குறைந்த அல்லது எந்தவொரு அனுபவமும் இல்லாத ஒருவரிடம் நாங்கள் எவ்வாறு முன்வைக்க முடியும்? கீழ்மட்ட நிலையிலிருந்து தொடங்கி, கடந்த 30 ஆண்டுகளாகவே இத்துறையின் ஒரு அங்கமாக திகழ்ந்து வரும் நமது முதல்வரை தவிர்த்து, தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடியவர் வேறொருவர் இல்லை.

மேலும் இவற்றை கருத்தில் கொள்ளுங்கள்: அரசு டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்துங்கள். இது அரசுக்கு வருவாயை கொண்டு வருவதோடு, ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் செலுத்தும் பார்வையாளர்களுக்கும் நிவாரணம் அளிக்கும். திரைப்படங்களுக்கான மாநில வரியை ரத்து செய்யுங்கள். ஏனெனில், ‘ஒரே இந்தியா… ஒரே வரி’ என்ற விதிக்கு எதிராக இரண்டு வரிகளை விதித்துள்ள இந்தியாவின் ஒரே மாநிலம் நாம்தான்.

சிறு திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மானியத்தை உயர்த்தி தரவேண்டும். இவை அனைத்தையும் முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக அளிக்கலாம் என்பது எனக்கு தெரியும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ராஜ்மோகனை நான் இழிவுபடுத்தவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே. முதல்வரால் எங்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்க முடியும்.
இவ்வாறு விஷால் தெரிவித்துள்ளார்.

Tags : Rajmohan ,Minister for ,Film Industry ,Vishal ,Chennai ,Chief Minister ,Vijay Thaweka ,Tamil Nadu ,Chennai Egmore Assembly ,Minister ,School ,Education, Information and Advertising, and Film Technology… ,
× RELATED திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான...