- தாய்லாந்து பேட்மிண்டன் சத்விக்
- சிராக்
- பாங்காக்
- சிராக் ஷெட்டி
- சாத்விக்
- சாய்ராஜ் ரங்கிரெட்டி
- தாய்லாந்து ஓப்பன் பேட்மிண்டன்
- பேங்காக், தாய்லாந்து
- தாய்லாந்து திறந்த…
பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி இணை சிறப்பான வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். தாய்லாந்தின் பாங்காக் நகரில், தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராய் ரங்கி ரெட்டி இணை, மலேசியாவின் நூர் இஸுதீன் முகமது ரும்சானி, கோ ஸெ ஃபெ இணையுடன் மோதியது.
இப்போட்டியில் இரு தரப்பும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் செட்டை மலேசிய இணை 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தியது. 2வது செட்டில் சுதாரித்த இந்திய இணை, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. அதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 21-16 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். அதனால், 2-1 என்ற செட்களில் வெற்றி வாகை சூடிய சாத்விக், சிராக் இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
* யமகுச்சி – யுஃபெய் பைனலில் மோதல்
நேற்று நடந்த தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமகுச்சி, தாய்லாந்து வீராங்கனை பிட்சமோன் ஒபட்னிபுத் மோதினர். இப்போட்டியின் துவக்கம் முதல் யமகுச்சி சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தினார். புள்ளிகளை அநாயாசமாக குவித்த அவர், 21-11, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யுஃபெய், ஜப்பான் வீராங்கனை ஹினா அகேச்சி களம் கண்டனர். இப்போட்டியில் இருவரும் சளைக்காமல் மோதி புள்ளிகளை எடுக்க முனைந்தனர். இருப்பினும் 21-17, 21-19 என்ற நேர் செட்களில் யுஃபெய் வென்றார். இதையடுத்து, யமகுச்சி, யுஃபெய் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.
