ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கரிசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தார். நேற்று அதிகாலை அங்கு வந்த 2 பேர் பட்டியின் வேலியை உடைத்து, ஆடுகளை திருடிச் செல்ல முயன்றனர். அதனைக்கண்டு நாய்கள் குரைத்துள்ளன. சத்தம் கேட்டு மணி எழுந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் செல்ல முயன்றதை கண்டு கூச்சலிட்டார்.
உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, பிடிபட்ட வாலிபர், ‘நான் தவெக நிர்வாகி, என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது’ எனக்கூறி மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மக்கள், நீ யாராக இருந்தால் என்ன எனக்கூறி தர்மஅடி கொடுத்தனர். மேலும், ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், விரைந்து வந்த போலீசார் பிடிபட்டவர்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் செங்கானூரைச் சேர்ந்த ஏழுமலை மகன் தனுஷ் (21) மற்றும் 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
தனது காதலிக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்காக ஆடுகளை திருட முயன்றதாக தனுஷ் கூறினான். அண்மையில் கரிசல்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனதாக மக்கள் புகாரளித்தனர். எனவே, அந்த திருட்டுக்கும் பிடிபட்ட இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து டூவீலரும் பறிமுதல் செய்யப்பட்டது.
