நன்றி குங்குமம் டாக்டர்
குழல் இனிது யாழ் இனிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என திருவள்ளுர் கூறுகிறார்.குழந்தைப் பருவத்தில் மழலை மொழியில் குழந்தைகள் திக்கி திக்கி பேசுவதை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதுவே, குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகும் திக்கி திக்கி பேசினால் இந்த சமூகம் அந்த குழந்தைக்கு திக்குவாயன் என பெயர் சூட்டிவிடும். இப்படி குழந்தைகள் திக்கி திக்கி பேசுவதற்கு என்ன காரணம், திக்குவாய் பிரச்னையை சரி செய்ய முடியுமா.. அதற்கான தீர்வு என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் குழந்தை வளர்ச்சி மற்றும் நடத்தை சிறப்பு மருத்துவர் ச. பெருமாள் சத்யா. மேலும், அவர் கூறியதாவது…
குழந்தைகள் பேசும்போது கோர்வையாக பேச திணறுவதை திக்குவாய் அல்லது பேச்சுத் திணறல் என்கிறோம். பொதுவாக குழந்தைகள் பேச கற்றுக் கொள்ளும்போது அவர்களின் பேச்சுத்திறன் முழு வளர்ச்சி அடையும் முன்பாக, ஒவ்வொரு வார்த்தையும் யோசித்து யோசித்து பேசும்போது, பேச்சு திணறல் அல்லது திக்குதல் ஏற்படலாம்.
திக்குவாய் குறித்த பொதுவான தகவல்கள்
பொதுவாக மழலைப் பருவத்தில் திக்கி திக்கி பேசும் குழந்தை வளர வளர, பேச்சுத்திறன் முழு வளர்ச்சி அடையும் போது, தானாகவே சரியாகிவிடும். இதனை ‘‘டெவலெப்மெண்டல் டிஸ்புலுயன்சி” (Developmental Disfluency) என்பர். இவ்வகையான பேச்சுத் திணறல் பொதுவாக 2-3 வயது குழந்தைகளில் அதிகம் காணப்படும். அதுபோன்று இந்தப் பேச்சு திணறல் குறைபாடு பெரும்பாலும் ஆண் குழந்தைகளையே அதிகம் பாதிக்கின்றது. பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளில் நான்கு மடங்கு அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
இந்த திக்குவாய் பிரச்னையை பொருத்தவரை பெற்றோருக்கோ அல்லது குடும்பத்தில் நெருங்கிய உறவில் யாருக்கேனும் பேச்சுத் திணறல் இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு வர மூன்று மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பேச்சுத் திணறல் அறிகுறிகள்
குழந்தைக்கு குழந்தை மாறுபடும்.
ஒரு வார்த்தையின் முதல் ஒலியை திரும்பத்திரும்பச் சொல்வது. வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்வது. வார்த்தைகளுக்கு இடையே நீண்ட இடைவெளி கொடுத்து பேசுவது. ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தையை பயன்படுத்துதல். பேசும்போது கண் இமைகளை சிமிட்டுதல், முகத்தசைகள் சுருக்குதல் அல்லது பெருமூச்சு விடுதல். வார்த்தையின் முதல் எழுத்து சற்று அழுத்தமாகவும், தடுமாற்றத்துடனும் வருவது போன்றவை திக்குவாய் பிரச்னைகளின் அறிகுறிகளாகும்.
குழந்தையின் மனநிலை மற்றும் பாதிப்புகள்
*மன அழுத்தம் மற்றும் இறுக்கமான சூழல்கள் பேச்சுத் திணறலை அதிகப்படுத்தலாம்.
*திக்குதல் அதிகமாகும் போது குழந்தை அதனை உணர ஆரம்பித்து மன அழுத்தத்திற்கு உள்ளாகிறது.
*இதனால் மற்றவர்கள் முன்பாக பேசுவதை தவிர்ப்பது, விரக்தி மனநிலை மற்றும் மன ஊக்கம் குறைதல் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
*சக குழந்தைகளின் கேலி கிண்டலுக்கு ஆளாகி, பள்ளி செல்வதையே வெறுக்கத் தொடங்குகின்றனர்.
குறிப்பு: பாடும் போது அல்லது செல்லப்பிராணிகளுடன் பேசும் போது குழந்தைகள் பொதுவாக திக்குவதில்லை.
மருத்துவ ஆலோசனை எப்போது தேவை?
பேச்சுத்திணறல் உடைய குழந்தைகள் பொதுவாக நல்ல அறிவுத்திறனோடு இருப்பர். எனினும், கீழ்கண்ட சூழல்களில் மருத்துவரை அணுகுவது அவசியம்: ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளில் பேச்சுத்திணறல் காணப்பட்டால். வயது பேதமின்றி ஒரு மாதத்திற்கு மேலாக பேச்சுத்திணறல் இருந்தால். ஆட்டிசம் (Autism), கற்றல் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி (Hyperactivity) அல்லது செவித்திறன் குறைபாடு போன்ற பாதிப்புகள் உடன் இருந்தால்.
சிகிச்சை முறைகள்
குழந்தை மருத்துவர் அல்லது ‘‘வளர்ச்சி மற்றும் நடத்தை” சிறப்பு மருத்துவரிடம் (Developmental and Behavioural Paediatrician) அழைத்துச் செல்ல வேண்டும்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு ‘‘பேச்சு சிகிச்சையாளர்” (Speech Therapist) தகுந்த பயிற்சிகளை வழங்குவார். இப்பொழுது இதற்கான பல நவீன மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. தாமதிக்காமல் பயிற்சியை ஆரம்பித்தல் சிறப்பான பலனைத் தரும்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை
குழந்தைக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்கித் தர வேண்டும்.
பிற குழந்தைகளோடு பழகவும், விளையாடவும் ஊக்கப்படுத்த வேண்டும்.
குழந்தையின் மனோதிடத்தை அதிகரிப்பது அவசியம் ஆகும்.
தொகுப்பு:குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பெருமாள் சத்யா
