×

சக பெண்களின் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

இன்றைய நவீன உலகில் பெண்கள் பொருளாதார ரீதியாக தற்சார்பு அடைவது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் ‘யுனிக் கிரியேட்டிவ்ஸ்’ (Unique Creatives) பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் அன்புச்செல்வி, நூற்றுக்கணக்கான பெண்களுக்கு வாழ்வாதாரப் பயிற்சிகளை வழங்கி ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.“ஆரம்பத்தில் நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.

ஆனால், ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. தையல் கடைகளில் என் ஆடைகளைக் கொடுக்கும் போது நான் எதிர்பார்த்த நேர்த்தி கிடைக்கவில்லை. இதனால் நானே எனக்காக ‘ஃபேஷன் டிசைனிங்’ கற்கத் தொடங்கினேன். நான் உடுத்தும் ஆடைகளை பார்த்து என்னை சுற்றியிருந்தவர்கள் ஆர்வம் காட்டினர். எனது ஆடை வடிவமைப்பு திறனை வைத்து தொழில் தொடங்கி அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முயற்சி செய்தேன். மதுரை, ஜெயந்திபுரத்தில் பொட்டிக் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தேன். கடைக்கு வரும் பெண்கள் சிலர் எங்களுக்கும் பயிற்சியளிக்க முடியுமா என்று கேட்டனர்.

அதனடிப்படையில் நான் தையல் பயிற்சியினை அளிக்க தொடங்கினேன். அதில் சில பெண்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்தவே சிரமப்பட்டனர். அவர்களின் நிலையை கேட்கவே கஷ்டமாக இருக்கும். அதன்பின்னர் உண்மையில் பொருளாதார ரீதியாக சிரமப்படும் பெண்களுக்கு இலவசமாகவே பயிற்சி வகுப்புகளை அளிக்க தொடங்கினேன். அவர்களும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தொழில்முனைவோர்களாக ஆகவேண்டும் என்று எண்ணினேன்.

நான் எதைக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேனோ, அதை முதலில் நானே முறையாகக் கற்றுக்கொள்வதை வழக்கமாக்கி கொண்டேன். தையல் பயிற்சியுடன் நிறுத்தாமல், மெஷின் எம்பிராய்டரி மற்றும் ஆரி ஒர்க் ஆகியவற்றை திறம்படக் கற்றுக்கொண்டு, அவற்றை என் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினேன். நன்றாக கற்றுக்கொண்ட பெண்கள் அதன் மூலம் வருமானம் ஈட்டுவதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

மேலும், இது போன்று நிறைய பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன். அடுத்தகட்டமாக சென்னைக்கு சென்று அழகுக்கலை சார்ந்த ஒரு கோர்ஸ் படித்தேன். அதற்கான பயிற்சியும் அளிக்க ஆரம்பித்தேன். இப்போது தையல் மட்டுமின்றி, அழகுக்கலை, வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு, மெஹந்தி, ஆரி எம்பிராய்டரி, சணல் பை தயாரித்தல், சோப்பு தயாரிப்பு, ஊதுபத்தி தயாரிப்பு மற்றும் பழைய துணிகளிலிருந்து புதிய பைகளைத் தயாரிக்கும் ‘அப்சைக்கிளிங்’ (Upcycling) போன்ற பல்துறை பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்” என்றவர், உணவு தயாரிப்பு பயிற்சியாளர் ஆகவும் செயல்படுகிறார்.

“பெண்களின் வருமான வாய்ப்பை அதிகரிக்க உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த பயிற்சிகளையும் வழங்கி வருகிறேன். வீட்டிலேயே சுத்தமான முறையில் மசாலாப் பொடிகள், முருங்கை இலையைப் பதப்படுத்தி அதில் பொடி, இட்லிப் பொடி தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்த உணவுகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வும் வழங்கி வருகிறேன். மசாலாப் பொருட்கள் மட்டுமில்லாமல் சிறுதானியங்களில் லட்டு, குக்கீஸ், பிரவுனி மற்றும் கேக் வகைகள் தயாரிப்பதற்கான பயிற்சிகளையும் பெண்களுக்கு வழங்கி வருகிறேன்.

இப்பயிற்சிகள் 25 நாட்கள் முதல் 5 மாதங்கள் வரை வழங்கப்படுகின்றன. என்னிடம் பயிற்சி பெற்ற பலர் இன்று சொந்தமாக உணவகங்கள் மற்றும் ‘கிளவுட் கிச்சன்’ போன்றவற்றை நடத்தி வருகின்றனர். எங்க நிறுவனம் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில் 90% இலவசமாகவே வழங்குகிறோம். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்கள் மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள், தனிப் பெற்றோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.

பயிற்சியினை முடித்தும் தையல் இயந்திரம் வாங்க வசதி இல்லாத ஏழைப் பெண்களுக்கு என் இன்ஸ்டிடியூட்டில் இருந்து தையல் இயந்திரங்களை இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக வழங்கியுள்ளேன். பேச்சு மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களைத் தொழில்முனைவோர்களாக மாற்றி வருகிறோம். பயிற்சி அளிப்பதோடு மட்டுமின்றி, பெண்கள் தயாரிக்கும் பொருட்களைச் சந்தைப்படுத்த MSME மற்றும் FSSAI பதிவுகள் செய்துகொடுத்தல், வங்கிக் கடன்களுக்கு உதவுதல் மற்றும் ஜே.சி.ஐ (JCI), மகளிர் திட்டம் போன்ற அமைப்புகள் மூலம் ஸ்டால்கள் அமைப்பது எனத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன்.

தற்போது தனது சகோதரருடன் இணைந்து இகாமர்ஸ் ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்கியுள்ளேன். இதன் மூலம் பெண்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் பிசினஸை வளர்க்கவும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். என் சேவையை பாராட்டி நான் விருது பெற்றதை போலவே என் மாணவர்கள் எட்டு பேர் இந்த ஆண்டு ‘சிங்கப்பெண்’ விருதைப் பெற்றுள்ளனர். ‘யுனிக் கிரியேட்டிவ்ஸ்’, பயிற்சி மையம் மட்டுமல்ல, பல பெண்களின் கனவுகளை நிஜமாக்கும் ஒரு உன்னதக் களமாகத்தான் இயங்கி வருகிறது. சவால்களை கடந்து சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்க விரும்புகிறேன்” என்றார் அன்புச்செல்வி.

தொகுப்பு: ஆர்.ஆர்

Tags : Kungumam Dozhi ,Anbuchelvi ,Madurai ,Unique Creatives' ,
× RELATED டிஜிட்டல் யுகம்: ஒரு புலனாய்வு பார்வை!