நன்றி குங்குமம் தோழி
அதிசய தெரு
தெற்கு போலந்தில் உள்ள கிரகோவ் நகரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் கிராமம், சுலோஸோவா. இக்கிராமத்தில் 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு செல்லும் ஒரு தெரு உள்ளது. இந்தத் தெருவின் இரு புறத்திலும், தெருவை நோக்கி சுமார் 6,000 வீடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கட்டப்பட்டுள்ளன. மட்டுமல்ல, ஒவ்வொரு வீட்டின் பின்புறத்திலும் விவசாய நிலம் பசுமையாக காட்சியளிக்கின்றன. விவசாய நிலத்தையும், தெருவையும் சுலபமாக அணுகுவதற்காக எல்லோருமே தெருவை நோக்கி வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். இந்தத் தெருவில் 6000 வீடுகள் இருப்பதால், இதை அதிசய தெருவாகக் கருதுகின்றனர்.
கூல் ஸ்டேஷன்
வெளியில் 40 டிகிரி வெயில் கொதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், ஜெய்ப்பூரில் புதிதாக உருவாகியிருக்கும் கூல் ஸ்டேஷனுக்குள் நுழைந்தால் 5 முதல் 6 டிகிரியில் கூலாக இருக்கிறது அந்த இடம். இத்தனைக்கும் அந்த ஸ்டேஷனுக்குள் குளிர்சாதன வசதி கிடையாது.
இதுதான் ஜெய்ப்பூரின் முதல் கூல் ஸ்டேஷன். வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக இந்தியர்கள் பயன்படுத்திய வெட்டிவேர் உட்பட பழைய நுட்பங்களை பயன்படுத்தி கூல் ஸ்டேஷனை வடிவமைத்திருக்கின்றனர். உணவு மற்றும் பொருட்களை டெலிவரி செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், நீண்ட நேரம் வெயிலில் அலைபவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த கூல் ஸ்டேஷனுக்கு வந்து ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 30 பேர் வரைக்கும் ஓய்வு எடுக்க முடியும். கட்டணம் கிடையாது.
பணக்கார நாடுகள்
ஒவ்வொரு வருடமும் உலகின் தலைசிறந்த பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியாவது வழக்கம். ஒரு நாட்டில் வசிக்கின்ற மக்களின் வாழக்கைத் தரம், நாட்டின் உள்கட்டமைப்பு, குறிப்பாக தனி நபர் வருமானம், தொழில் பாதுகாப்பு உட்பட பொருளாதார ரீதியான முக்கிய அம்சங்களின் அடிப்படையில் பணக்கார நாடுகளின் பட்டியல் இடப்படுகிறது. கடந்த வாரம் 2026-ம் வருடத்துக்கான பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியானது. இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்து, லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இரண்டு, மூன்று, நான்காம் இடங்களை பிடித்துள்ளன. ஐந்தாம் இடத்தை ஐஸ்லாந்தும், ஆறாம் இடத்தை சிங்கப்பூரும் பிடித்திருக்கின்றன. டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில், 9 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிங்கப்பூர் மட்டுமே ஆசியாவைச் சேர்ந்தது.
சாதனை
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்தியர் யார் தெரியுமா என்று கேட்டால், உடனே விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது சூர்யகுமார் யாதவ் என்று ஆண் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைத்தான் முதலில் சொல்வோம். ஆனால், ஸ்மிருதி மந்தனா என்ற வீராங்கனைதான் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்தியர். இந்த வரலாற்றைச் சமீபத்தில்தான் படைத்தார் மந்தனா. இதுவரை 162 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மந்தனா, 4,256 ரன்களை குவித்திருக்கிறார். இதில் ஒரு சதமும், 33 அரைச் சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 112 ரன்களை விளாசியிருக்கிறார். இதுவரை தாங்கள் விளையாடிய சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா, 4,231 ரன்களையும், விராட் கோலி, 4,188 ரன்களையும், சூர்யகுமார் யாதவ், 3,272 ரன்களையும் குவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சதுரங்க சாம்பியன்
சமீபத்தில் சைப்ரஸில் உள்ள பீஜியா எனும் இடத்தில் 2026-ம் ஆண்டுக்கான பெண்களுக்கான வேர்ல்டு கேண்டிடேட்ஸ் டோரன்மென்ட் எனும் சதுரங்கப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறுபவர் நேரடியாக பெண்களுக்கான உலக சாம்பியன் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்தப் போட்டியில் உலகின் பிரசித்திப் பெற்ற 8 சதுரங்க வீராங்கனைகள் போட்டியிட்டனர். இதில் 8.5 புள்ளிகளுடன் முன்னிலைப் பெற்று, சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கியிருக்கிறார் நம்ம ஊர் வைசாலி. பெண்களுக்கான வேர்ல்டு கேண்டிடேட்ஸ் டோரன்மென்ட்டில் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் வைசாலிதான். இந்த வெற்றியின் மூலம் பெண்களுக்கான உலக சாம்பியன் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றுவிட்டார். விரைவில் உலக சாம்பியன் பட்டத்தை வைசாலி வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு: த.சக்திவேல்
