×

வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உழைத்தோம்!

நன்றி குங்குமம் தோழி

கோவை ரத்தினபுரியில் 1990ம் ஆண்டு துவங்கி 35 ஆண்டுகளுக்கு மேலாக நல்ல பெயர் புகழுடன் செயல்பட்டு வரும் ரஞ்சித் பிளஸ்சிங் கேட்டரர்ஸ் என்ற கேட்டரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பியூலா ரஞ்சித் தன் பயணம் குறித்து பகிர்ந்தார்.

உங்களைப் பற்றி…

‘நான் பிறந்து, வளர்ந்தது இந்த கோவை ரத்தினபுரியில்தான். எட்டாம் வகுப்பு வரைதான் படித்தேன். அப்பா துணிகள் விற்பனை செய்யும் பிசினஸ் செய்து வந்தார். அம்மா இல்லத்தரசி.

கேட்டரிங் துறை…

என் கணவர் கோவை புளியம்பட்டியில் அரசுப்பள்ளி ஒன்றில் சிறிய அளவில் கேன்டீன் வைத்து நடத்தி வந்தார். என் தந்தை ஒருமுறை தேவாலயத்திற்கு சென்ற போதுதான் என் கணவரை சந்தித்துள்ளார். அவரின் பேச்சு மற்றும் செயல் என் அப்பாவிற்கு பிடித்துவிட்டது. அப்போதே இவர்தான் மாப்பிள்ளை என்று முடிவு செய்துவிட்டார். என் கணவருக்கு சொந்தபந்தம் யாரும் இல்லை. எங்களின் உறவினர்கள் எல்லோரும் ‘சொந்த பந்தங்கள் இல்லாதவர், யார் என்றே தெரியாதவருக்கு எப்படி திருமணம் செய்து வைக்கலாம்’ என்று என் அப்பாவிடம் கேட்டுள்ளார்கள். ஆனால், என் அப்பாவோ ‘ரஞ்சித் திறமைசாலி… எதிர்காலத்தில் நல்ல உயர்ந்த நிலைக்கு நிச்சயம் வருவார்’ என்று சொல்லிவிட்டார்.

திருமணம் 1988ல் எளிமையாக நிகழ்ந்தது. அதுவரை பெற்றோரின் வீட்டில் வசதியாக வாழ்ந்து வந்த எனக்கு கணவருடன் சிறிய வாடகை வீட்டில் சோதனை மற்றும் மனக்கவலையுடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. புளியம்பட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கேன்டீன் நடத்த முடியாமல் போனது. தினசரி வாழ்க்கைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பெட்டிக்கடை வைத்தோம். நான் வீட்டில் பப்ஸ் போட்டுத் தருவேன். கணவர் அதை விற்று வருவார்.

அதில் போதிய வருமானம் வரவில்லை. தள்ளு வண்டியில் அடுப்பு வைத்து சூடான இட்லி, வடை, தோசை, ஆப்பம் விற்றோம். நாங்கள் தந்த மாறுபட்ட தரமான நல்ல சுவையால் பலரும் விரும்பி வாங்கினார்கள். வருமானமும் வரத் துவங்கியது. கிடைத்த லாபத்தில் ஏழைப் பெண் ஒருவருக்கு கிரைண்டர் வாங்கிக் கொடுத்தோம். அவர் எங்களுக்கு மாவு அரைத்து தருவார். இதன் மூலம் அந்தப் பெண்ணிற்கு வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.

எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், ஒருநாள் என் கணவருக்கு கடன் கொடுத்த அனைவரும் ஒரே நேரத்தில் கடனை திருப்பி தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார்கள். என் கணவர் அதை சமாளிக்க முடியாமல் யாரிடமும் கூறாமல் வீட்டைவிட்டு ஆந்திராவிற்கு ஓடிப்போய் விட்டார். எனக்கு உலகமே இருண்டுபோய் விட்டது. கடன் தந்தவர்கள் என்னை மிரட்ட நான் பயந்துபோய் கை குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அப்பாதான் என் கணவரின் கடனை எல்லாம் அடைத்தார். அதன் பிறகு ஆந்திராவில் ஓட்டல் ஒன்றில் கிளீனராக பணிபுரிந்தபடி மாஸ்டரிடம் சமையல் நுணுக்கங்களை முழுமையாக கற்றுக்கொண்ட என் கணவரை தேடிப் பிடித்து அழைத்து வந்தார். அவர் வந்த போதுதான் ‘வாழ்ந்து காட்டியே தீருவோம்’ என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தது. கோவை டவுன்ஹால் உள்ள சர்ச்சில் கேன்டீன் போட்டோம்.

அசைவம் மற்றும் சைவ உணவகம் அமைத்து வாழ்வில் படிப்படியாக உயரத் துவங்கினோம். எங்க கடையின் பிரியாணி ஃபேமஸ். அதற்கான தனிப்பட்ட ஆர்டர்களும் வரத்துவங்கியது. இரவு, பகல் பார்க்காமலும் நானும் என் கணவரும் உழைத்தோம். அதன் பிறகு 1990ல் ‘ரஞ்சித் பிளஸ்சிங் கேட்டரர்ஸ்’ என்ற பெயரில் கேட்டரிங்கை ஆரம்பித்தோம். இன்று திருமணம், வரவேற்பு, பிறந்த நாள், வளைகாப்பு, என அனைத்து விழாக்களுக்கும் கேட்டரிங் செய்து வருகிறோம்.

உங்களின் தனிச்சிறப்பு…

ஐம்பதிற்கும் மேற்பட்ட புதுமையான உணவுகளை வழங்கி வருகிறோம். தரம் மற்றும் சுவைதான் எங்களின் தனிச்சிறப்பு. ஐநூறு பேர்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக 100 பேர் அதிகமாக வந்திடுவார்கள். ஒரு மணி நேரத்தில் உணவுகளை தயாரித்து தந்துவிடுவோம்.நானும் என் கணவரும் படித்து பட்டங்கள் பெறாவிட்டாலும் பல வருட அனுபவ திறமையால் இந்த கேட்டரிங்கை சிறப்பாக செய்து வருகிறோம். நாங்க படிக்கவில்லை என்பதால் என் மகன், மகளை நன்றாக படிக்க வைத்திருக்கிறோம். கோவையில் பெரிய பெரிய ஹோட்டல்கள் இருந்த போதிலும் அதனுடன் போட்டி போட்டு மிகச் சுவையான அசைவ, சைவ உணவுகளை ரஞ்சித் கேன்டீனில் வழங்கி வருகிறோம். அதனால் பலரும் தேடி சாப்பிட வருகிறார்கள்.

எங்களின் இந்த வளர்ச்சிக்கு என் கணவர், என் மகன், மருமகள் மட்டுமே என குறிப்பிட முடியாது. என் ஊழியர்களும் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். எல்லோரையும் விட 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆதரவு தந்து வரும் வாடிக்கையாளர்களுக்குதான் நாங்க நன்றியினை சொல்ல வேண்டும்.

எதிர்கால லட்சியம்…

பட்ட மேற்படிப்புகள் படித்திருக்கும் எங்கள் மகன், மருமகள் வழிகாட்டுதலுடன் அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளிலும் எங்கள் ‘ரஞ்சித் கேன்டீன்’ துவங்கி உலகின் எல்லோர் நாவிலும் எங்கள் பிரியாணி சுவை பரவச் செய்ய வேண்டும். மேலும், எங்களால் முடிந்தவரை பலருக்கு உதவி செய்ய வேண்டும்’’ என்றார் பியூலா.

தொகுப்பு: விஜயா கண்ணன்

 

Tags : Kunkumam Dozhi ,Beula Ranjith ,Ranjith Blessing Caterers ,Ratnapura, Coimbatore ,
× RELATED புவி நலம் காக்கும் தம்பதியினர்