×

மகாராஷ்டிராவில் இன்று காலை மின்கம்பத்தில் மோதிய விமானம்: உயிர் தப்பிய பைலட்

பாராமதி: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே பாராமதி பகுதியில் ‘ரெட்பேர்ட்’ விமான பயிற்சி அகாடமி செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இதே பயிற்சி அகாடமியைச் சேர்ந்த விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டு விபத்துகளில் சிக்கி வருகின்றன. இந்த சூழலில் இன்று காலை 8.50 மணி அளவில், கோஜுபாவி கிராமம் அருகே 2 பேர் அமரக்கூடிய சிறிய பயிற்சி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில் பயிற்சியில் இருந்த ஒரு இளம் விமானி மட்டும் தனியாக பயணம் செய்தார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்து மிகவும் தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஒரு மின் கம்பத்தில் மோதிய விமானம், தரைப்பகுதியில் பயங்கரமாக மோதி நின்றது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தாலும், அதிர்ஷ்டவசமாக பயிற்சி விமானி காயமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்பி சந்தீப் சிங் கில் தலைமையிலான போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘விபத்து நடந்ததற்கான தொழில்நுட்ப காரணம் மற்றும் இன்ஜின் கோளாறு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Maharashtra ,Baramati ,Redbird ,Pune ,
× RELATED சிறை அனுபவத்தை தெரிந்து கொள்ள ரூ.500...