- உச்ச நீதிமன்றம்
- தேசிய சோதனை நிறுவனம்
- அகில இந்திய மருத்துவர்கள் சங்கம்
- புது தில்லி
- மருத்துவர்கள் சங்கம்
புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் டாக்டர்கள் சங்கம் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. கடந்த 3ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் நுழைவுத்தேர்வை, நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் வினாத்தாள்கள் ஜெய்ப்பூரில் உள்ள அச்சகத்திலிருந்து கசிந்து, வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் முன்கூட்டியே பரவியது விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த நிலையில், தேசிய தேர்வு முகமை அந்த தேர்வை ரத்து செய்தது.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை கோரி பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் தன்வி துபே உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தேசிய தேர்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும் அல்லது முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேசிய தேர்வு நேர்மை ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
மேலும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும். வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வருங்காலங்களில் முறைகேடுகளைத் தவிர்க்க வினாத்தாள்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு முறை, கணினி வழி தேர்வு மற்றும் மையம் வாரியாக முடிவுகளை வெளியிடுதல் போன்ற மாற்றங்களை கொண்டு வர வேண்டும்’ என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் மறுதேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
