புதுடெல்லி: மேற்கு ஆசியா போரின் தாக்கங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையிலான விளக்க கூட்டத்தில் ஒன்றிய உரத் துறையின் கூடுதல் செயலாளர் அபர்ணா எஸ்.சர்மா கூறியதாவது:
வரவிருக்கும் கோடைக்கால விதைப்பு பருவத்தில் உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, யூரியா மற்றும் பிற மண் ஊட்டச்சத்துக்களை அரசு இறக்குமதி செய்து வருகிறது. முக்கிய உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை எவ்வித மாற்றமும் இன்றி நிலையாக நீடிக்கிறது. இன்றைய தேதிப்படி பார்கையில், காரீப் பருவத்திற்காக தேவைப்படும் என மதிப்பிடப்பட்ட அளவில் நம்மிடம் உரக் கையிருப்பு 51 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.
வழக்கமாக, தேவைப்படும் அளவில் 33 சதவீதமே கையிருப்பில் இருக்கும் நிலையில், தற்போதைய கையிருப்பு நிலை வழக்கமான அளவை விட மிக அதிகமாகவே உள்ளது. நடப்பாண்டில் காரீப் பருவத்திற்கு தேவைப்படும் உரத்தின் அளவு 390.54 லட்சம் டன் என வேளாண் துறை மதிப்பிட்டுள்ளது. உர கையிருப்பு நிலை மிகவும் திருப்திகரமாக உள்ளது. எனவே விவசாயிகள் பதற்றமடைந்து உரங்களை வாங்கி சேமிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். உள்நாட்டு உற்பத்தியும் வழக்கமான அளவில் சீராக நடைபெற்று வருகிறது. யூரியா உற்பத்தி ஆலைகள் முழுத் திறனுடன் இயங்கி வருகின்றன. பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் வகை உரங்களும் நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
