புதுடெல்லி: தங்கம் வாங்க, வௌிநாட்டு பயணங்களுக்கு மோடி கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து கொரோனா கால கட்டுப்பாடு அமல்படுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் தீவிர போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு மக்களின் சுமையை குறைக்க முயற்சிப்பினும், நாட்டின் பொருளாதாரத்தை காக்க மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை பெருமளவு குறைக்க வேண்டும். இதற்காக மெட்ரோ ரயில் மற்றும் மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் பின்பற்றியதை போல வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை மீண்டும் மக்கள் செயல்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாடுகளில் திருமணங்கள் நடத்துவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும்’ என்று மோடி வலியுறுத்தினார். இதற்கிடையே மேற்காசிய போர் சூழலை ஆய்வு செய்யவும், எரிபொருள் பிரச்னையை கையாளவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பொருளாதாரத்தை பாதிப்பில் இருந்து மீட்கும் நீண்டகால வியூகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா, ஹர்தீப் சிங் பூரி, கே. ராம்மோகன் நாயுடு, கிரண் ரிஜிஜு மற்றும் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பும், 45 நாட்களுக்குத் தேவையான எல்.பி.ஜி இருப்பும் உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து மிக உயர்ந்த அளவிலேயே நீடித்து வருவதால், நாடு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையைச் சுமக்க நேரிடுகிறது என்று அமைச்சர்களிடம் தெரிவித்தனர். அதோடு போர் தொடங்கி 70 நாட்களுக்கும் மேலாகியும் பெட்ரோலிய விலைகள் சீராகவே நீடித்து வரும் வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர்கள் தெரிவித்தனர். பல நாடுகளில் பெட்ரோலிய விலைகள் 30 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளன என்றும் தெரிவித்தனர். இதை எல்லாம் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்தது. இதுபற்றிய விரிவான அறிக்கையை விரைவில் பிரதமர் மோடியிடம் வழங்க உள்ளனர். அதை ெதாடர்ந்து இந்தியாவில் கொரோனா காலத்து கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
எரிபொருள் வாங்க கட்டுப்பாடு இல்லை
உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் தொடர்ந்து விலை ஏற்றம் இருந்தபோதிலும், எரிபொருள் விநியோகத்தைப் பங்கீடு செய்ய இந்தியாவுக்கு எந்தத் திட்டமும் இல்லை. மேலும் எரிபொருள் வாங்குவதற்கு எந்தவி கட்டுப்பாடும் இல்லை என்று எண்ணெய் அமைச்சக செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை. போதுமான கையிருப்பு உள்ளது. பங்கீட்டு முறை எதுவும் நடைமுறையில் இல்லை. அது நடக்கப்போவதில்லை’ என்றார். அதேசமயம் அவர் எரிபொருள் வாங்குவதில் உள்ள பிரச்னை குறித்து கூறுகையில்,’ உண்மையில், நிலைமை இன்னும் சற்று மோசமாக உள்ளது. இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து இந்தியா தனது 14 கப்பல்களை வெளியேற்றியுள்ளது . நாங்கள் பிற நாடுகளிலிருந்தும் கொள்முதல் செய்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே உள்ள நாடுகளில் இருந்து கொள்முதலை அதிகரித்துள்ளோம்’ என்றார்.
