- மகளிர் சூப்பர் லீக் கால்பந்து
- மான்செஸ்டர்
- க்ராலி மகளிர் சூப்பர் லீக் கால்பந்து போட்டித்தொடர்
- மகளிர் சூப்பர் லீக் கால்பந்து போட்டித்தொடர்
- இங்கிலாந்து
கிராவ்லி மகளிர் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் அணி, 10 ஆண்டுக்கு பின் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி மகளிர் கால்பந்து அணிகள் மோதும் மகளிர் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. கிராவ்லி நகரில் நேற்று நடந்த போட்டியில், புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள பலம் வாய்ந்த ஆர்சனல் அணியும், பட்டியலில் 6ம் இடத்தில் உள்ள பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியன் அணியும் மோதின. துவக்கம் முதல் இரு அணிகளை சேர்ந்த வீராங்கனைகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர்.
அதன் பலனாக, 43வது நிமிடத்தில் பிரைட்டன் அணியின் ஃபூகா சுனோடா போட்டியின் முதல் கோல் அடித்து அசத்தினார். அதன் பின் 2வது பாதியில் ஆர்சனல் அணியின் பிரிடா மானும், 62வது நிமிடத்தில் அற்புதமாக பந்தை கடத்திச் சென்று தனது அணிக்காக முதல் கோல் போட்டார். அதன் பின் கோல் விழாததால், 1-1 என்ற கணக்கில் இப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், மான்செஸ்டர் அணி, 21 போட்டிகளில் 17ல் வென்று 52 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்தது.
அதற்கு போட்டியாக திகழ்ந்த ஆர்சனல் அணி, 19 போட்டிகளின் முடிவில் 12 வெற்றிகள் பெற்று 42 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் இருந்தது. ஆர்சனல் அணி, மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றாலும், மான்செஸ்டர் அணியை மிஞ்ச முடியாத சூழல் உள்ளதால், மான்செஸ்டர் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2016ம் ஆண்டுக்கு பின், அந்த அணி தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
