- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயில்
- சேலம்
- அப்பா பைத்தியம் சுவாமி கோயில்
- சேலம் சூரமங்கலம்
சேலம்: சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வழிபாடு செய்தார். சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அதேபோல், முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து, அதன்பிறகு முடிவுகளை எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதன்படி, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு முன் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு வந்து சென்றார். தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5வது முறையாக புதுச்சேரியின் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்க உள்ளார்.
இதனிடையே நேற்று மதியம் சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வந்தார். பூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பொருட்களை தாம்பூல தட்டில் எடுத்து வந்து கோயிலில் வழங்கி மனமுருகி வேண்டினார். தொடர்ந்து அமைச்சரவை பட்டியலை சுவாமியின் பாதத்தில் வைத்து வழிபட்டு, பின்னர் அதை எடுத்துச்சென்றார். தொடர்ந்து கோயிலில் இருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பு ஏற்கும் தவெக தலைவர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு சிறப்பாக பணி செய்ய வாழ்த்துக்கள். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ச்சியாக ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறோம். அதேபோல், பாஜக கூட்டணி கட்சிகள் சார்பிலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்,’’ என்றார்.
